தும்மலை கட்டுப்படுத்தினால் இவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறுமா..?

by Lifestyle Editor

பொதுவாக தும்மல் வரும் சமயத்தில் நம் மூளைக்கு கனப்பொழுதில் செய்தி சென்று சேரும். கண் விழிகள் இரண்டும் பிதுங்குவதைப் போல முட்டிக் கொண்டு வரும். மூக்கில் இருந்து பெரும் சத்தத்துடன், எண்ணற்ற நீர்த் துளிகளுடன் தும்மல் வெளியாகும்.

இவ்வாறு தும்மல் வெளியாகும்போது, நாகரீகம் கருதி பலர் அதை கட்டுப்படுத்த முயற்சி செய்வது உண்டு அல்லது பிறர் மீது தெறித்து விடக் கூடாது என்று கவனமுடன் செயல்படுவோம். முழுவதுமாக கட்டுப்படுத்தியவருக்கு என்ன நிகழ்ந்தது?

கார் ஓட்டும்போது…

காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அண்மையில் கார் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தும்மல் வர இருந்த நிலையில், அதை அவர் கட்டுப்படுத்தினார். ஆனால், கட்டுப்பாட்டை மீறி தும்மல் வர இருந்தது. ஆனால், வாயையும், மூக்கையும் அவர் இறுக மூடிக் கொண்டார். இதனால் அதீத அழுத்தம் ஏற்பட்டு, அவருடைய மூச்சுக் குழாயில் சிறிய ஓட்டை விழுந்திருக்கிறது.

ஏன் இப்படி நிகழுகிறது.?

தும்மலானது அளவற்ற அழுத்தத்துடன் வெளியேறும். அதை நீங்கள் கட்டுப்படுத்த முயற்சி செய்தால், அந்த அழுத்தமானது இயல்பை விட 20 மடங்கு கூடுதலாக இருக்கும். அதையும் மீறி கட்டுப்படுத்த முயற்சி செய்தால் சுவாசக் குழாயில் பிரச்சினைகள் வரலாம்.

காற்று அடைத்துக் கொள்ளும்

தும்மலை கட்டுப்படுத்தும்போது, நம் கழுத்துப் பகுதியில் உள்ள தசைகளில் ஆழமான திசுக்களுக்கு இடையே காற்று அடைத்துக் கொள்ளுமாம். இது எக்ஸ்-ரே மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நுரையீரல்களுக்கு இடையே உள்ள நெஞ்சுப் பகுதியிலும் காற்று அடைத்துக் கொள்ளுமாம்.

அறிகுறிகள்

தும்மலை அடக்கிய நபருக்கு கழுத்துப் பகுதி வீக்கம் அடைந்துள்ளது மற்றும் மிகுதியான வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், சுவாசித்தல், விழுங்குதல், பேசுதல் போன்ற நடவடிக்கைகளை இயல்பாக மேற்கொண்டுள்ளார். இருப்பினும், வலியால் தவித்த இந்த நபரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் சுவாசக் குழாயில் 0.08 இன்ச் அளவுக்கு ஓட்ட விழுந்திருப்பது தெரிய வந்தது. இதிலிருந்து அவர் குணமடைய 5 நாட்கள் ஆனதாம்.

அறுவை சிகிச்சை தேவைப்படவில்லை

மூச்சுக் குழாயில் ஓட்டை விழுந்த நபருக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதேபோல அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை. இதயத் துடிப்பு இயல்பானதாக இருந்தது. ரத்த அழுத்தம் அதிகரிக்கவில்லை. ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் உடல் வெப்பம் இயல்பாக இருந்தது. ஆனால், முதல் நாள் இரவில் அவருக்கு எதுவும் சாப்பிட கொடுக்கவில்லை. அதேபோல லேசான மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.

Related Posts

Leave a Comment