மீண்டும் படமாகிறது சில்க் ஸ்மிதாவின் வாழ்கை வரலாறு

by Lankan Editor

Actress Silk Smitha Bio Pic : இன்றளவும் ஒரு நடிகையின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது என்று கூறினால், அது சில்க் ஸ்மிதாவின் இறப்பில் தான் என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு புகழோடு வாழ்ந்த அந்த நடிகையின் இறுதி நிமிடங்கள் மர்மமான ஒன்றே.

ஏற்கனவே ஹிந்தியில் கடந்த 2011 ஆம் ஆண்டு நிலன் என்பவருடைய இயக்கத்தில், வித்யா பாலன் நடிப்பில் “The Dirty Pictures” என்ற தலைப்பில் நடிகை சில்க் ஸ்மிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டது. சுமார் 18 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், உலக அளவில் 117 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் அந்த படத்தில் கூறப்பட்டிருந்தது. நடிகை வித்யா பாலன் அவர்களும் தனது நேர்த்தியான நடிப்பை அந்த படத்தில் வழங்கியிருப்பார். இந்நிலையில் இயக்குனர் ஜெயராம் என்பவருடைய இயக்கத்தில் விஜய் என்பவர் தயாரிக்க நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு மீண்டும் ஒருமுறை படமாக உள்ளது.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என்று ஐந்து மொழிகளில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஆஸ்திரேலியா மற்றும் இந்திய நாட்டு மாடல் அழகியும், தமிழில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்கின்ற திரைப்படத்தில் பேயாக நடித்து கலையுலகில் அறிமுகமான நடிகையுமான சந்திரிகா ரவி இந்த திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிக்க உள்ளார்.

இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாளான டிசம்பர் 2ம் தேதி நடிகை சந்திரிகா ரவி அவர்கள் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் ஜெயராமருக்கு இது முதல் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கான மக்கள் தொடர்பு பணியை பிரபல PRO நிகில் முருகன் அவர்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

Related Posts

Leave a Comment