களமிறங்கிய ஜப்பான் தொழில்நுட்பம்.. ஜனவரி முதல்.. சென்னையில் இனி பயணம் செய்வது அடியோடு மாற போகுது!

by Column Editor

சென்னை:

சென்னையில் புதிதாக சில டிராபிக் வசதிகள், திட்டங்கள் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் (JICA) நிதியுதவியுடன், நகரத்திற்கான Intelligent Transport System எனப்படும் திட்டம் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC) மூலம் ஜனவரி மாதம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல வசதிகள், விதிமுறைகள், கண்காணிப்பு அமைப்புகள் கொண்டு வரப்பட உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான இடங்கள் இறுதி செய்யப்பட்டு, வடிவமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து துறைகளிடமிருந்தும் தரவு சேகரிப்பு நடந்து வருகிறது. மார்ச் 31, 2023 அன்று L&T உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது, ஒப்பந்தம் ஜூன் 6, 2023 அன்று JICA ஆல் அங்கீகரிக்கப்பட்டது. திட்டத்திற்கான ஒப்பந்தத் தொகை ₹530 கோடி.

சோதனை முயற்சி:

ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் சோதனை முறையில் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பின் வரும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

ஏற்படுத்தப்பட உள்ள வசதிகள்:

பூங்கா நிலையம் (கே.கே. நகர் நோக்கி), சாந்தி தியேட்டர் (கே.கே. நகர் நோக்கி), எல்.ஐ.சி (கே.கே. நகர் நோக்கி), உதயம் திரையரங்கம்/அசோக் பில்லர் (சிஎம்பிடி நோக்கி) மற்றும் ஆனந்த் தியேட்டர் (கே.கே. நகர் நோக்கி) ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிழற்குடைகளில் பயணிகள் தகவல் அமைப்பு வைக்கப்பட உள்ளது. ஸ்டெர்லிங் ரோடு மற்றும் லிபர்ட்டி தியேட்டர் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் ராயப்பேட்டை காவல் நிலைய பேருந்து நிறுத்தும் இடங்களுக்கும் ஜனவரியில் இந்த அமைப்பு வைக்கப்பட உள்ளது.

என்னென்ன திட்டங்கள்:

பஸ் நிறுத்தும் இடங்களில் உள்ள பயணிகள், பேருந்து வரும் மதிப்பிடப்பட்ட நேரத்தைப் பார்க்க வசதி செய்து கொடுக்கப்படும். அதாவது பேருந்து எந்த நேரத்தில் வரும், எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை எளிதாக ஜிபிஎஸ் வசதி மூலம் தெரிந்து கொள்ள முடியும். அடாப்டிவ் டிராபிக் சிக்னல் கட்டுப்பாட்டு அமைப்பு திட்டம் ஈ.வி.ஆர் சந்திப்பில் செயல்படுத்தப்படும். பெரியார் சாலை மற்றும் பர்னபி சாலை. ஈ.வெ.ரா சாலையில் அனைத்து சந்திப்புகளிலும் இந்த முறை செயல்படுத்தப்படும். பெரியார் சாலை மற்றும் ஹாரிங்டன் சாலை, டெய்லர்ஸ் சாலை மற்றும் டாக்டர் குருசுவாமி பாலம் போன்ற சாலைகளில் இந்த திட்டம் கொண்டு வரப்படும். சாலையில் இருக்கும் வாகனங்களை பொறுத்து தானாக சிக்னல்கள் மாறுவதுதான் அடாப்டிவ் டிராபிக் சிக்னல் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும்.

ஈ.வி.ஆர் சந்திப்பில் சிவப்பு விளக்கு விதி மீறல்களை கண்டறிய மற்றொரு திட்டம் செயல்படுத்தப்படும். பெரியார் சாலை மற்றும் புதிய ஆவடி சாலை (பச்சியப்பா) சந்திப்பு., டாடா மோட்டார்ஸ் அருகே கோயம்பேடு மேம்பாலத்தில் போக்குவரத்து விபத்து கண்டறிதல் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் விபத்துகள் எளிதாக கண்டறியப்படும் அதேபோல் சிவப்பு விளக்கை மீறும் நபர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். இப்படி முழுக்க முழுக்க தொழிநுட்ப ரீதியாக பல வசதிகளை கொண்டு வர உள்ளனர் . முக்கியமாக சாலைகளை வேகமாக செல்வதை கண்டறியவும் ஏஐ கேமராக்களை கொண்டு வர உள்ளனர் . மொத்தமாக பேக்கேஜ் போல இந்த வசதிகளை சென்னையில் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

Related Posts

Leave a Comment