சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 16ஆம் தேதி நடை திறப்பு

by Lifestyle Editor

சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை தொடர்ந்து 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாதம் ஆராட்டு விழாவும், சித்திரை மாதம் விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் அந்தந்த பூஜைக்காக திறக்கப்படும். நடை திறக்கும் போது மட்டும் பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வர். மகர ஜோதி, கார்த்திகை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையின் போது திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த மாதம் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பூஜைக்காக திறக்கப்படுகிறது.

17 ஆம் தேதி காலையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். 17 தேதி முதல் டிசம்பர் 27 ஆம் தேதி வரை அதாவது 41 நாட்கள் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். 27 ஆம் தேதி மாலை நடை அடைக்கப்படும். மீண்டும் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மாலை மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் செய்யப்படும்.

தொடர்ந்து ஜனவரி 19 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20 ஆம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும். அதற்கு பின் வழக்கம் போல் மாதம் ஒரு முறை பூஜைக்காக நடை திறக்கப்படும். அடுத்த ஆண்டு மண்டல கால பூஜைக்காக நவம்பர் மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்படும்.

இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment