கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது …

by Lifestyle Editor

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10-ந் தேதி(புதன்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து மே -13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் , தேர்தல் களத்தில் 2,613 வேட்பாளர்கள் உள்ளனர். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனை போட்டிகள் நிலவி வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸும், ஜனதா தளமும் தீவிர முனைப்புடம் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜனதா தளம் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் தெவகவுடா உள்ளிட்ட தலைவர்களும் , வேட்பாளர்களும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சட்டசபை தேர்தலுக்கான பரப்புரை இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்வு பெறுகிறது. 6 மணிக்கு மேல் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே தொகுதியில் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதுபோல், நட்சத்திர பேச்சாளர்கள் 6 மணியுடன் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனையொட்டி 3 கட்சிகளின் தலைவர்களும் இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) வேட்பாளர்கள் மட்டும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரை நிறைவு பெறுவதால், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Related Posts

Leave a Comment