எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநர் தேவைப்பட்டார்…இப்போது தேவையில்லையா? – தமிழிசை கேள்வி ..

by Lifestyle Editor

எதிர்க்கட்சியாக இருந்த போது எதற்கெடுத்தாலும் ராஜ்பவன் வாசலை மிதித்த திமுகவினர், ஆளுங்கட்சியான பின்னர் ஆளுநர் தேவையில்லை என்பதா? என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆளுநர் பதவியே தேவை இல்லை என்று, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னர் நீங்கள் இப்போது கூறக்கூடாது. எதிர்க்கட்சியாக இருந்த போது ராஜ்பவன் வாசலை நீங்கள் மிதிக்காமல் இருந்திருக்கலாமே. அப்போது எதற்கெடுத்தாலும் நீங்கள் ராஜ் பவன் வாசலை மிதித்தீர்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது உங்களுக்கு ஆளுநர் தேவைப்பட்டார். இன்று ஆளும் கட்சியாக இருக்கும் போது ஆளுநர் தேவைப்படவில்லையா? இதனால் உங்கள் எண்ணத்தில் நிலையற்ற தன்மை இருக்கிறது என்று, நீங்கள் நேரத்திற்கு ஏற்றவாறு பேசுகிறீர்கள் என்பதும் தெரியவருகிறது. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் மிகுந்த கால அவகாசம் எடுத்துக் கொண்டது ஏன் என்கிற கேள்விக்கு? கால அவகாசம் ஆன்லைன் தடை சட்டத்திற்கு மட்டு மல்ல, மற்ற சில சட்ட மசோதாக்களுக்கும் கூட அவர் எடுத்துக் கொண்டு இருக்கலாம். ஒவ்வொன்றையும் பரிசீலனை செய்வதற்கு கால அவகாசம் தேவைப்பட்டு இருக்கலாம். ஆளுநர்களை முதலில் ஆளுநராக நடத்துங்கள். எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு, ஆளுநருக்கும் அவர் கருத்துகளை கூற கண்டிப்பாக உரிமை உண்டு.

ஆளுநரின் கருத்துகளுக்கு நீங்கள் எதிர் கருத்து கூறலாம். ஆனால் ஆளுநர் கருத்தே கூறக்கூடாது என நீங்கள் எப்படி சொல்ல முடியும். தி.மு.க. அரசு இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து பேசி வரும் நிலையில் இது குறித்த கருத்து என்பதற்கு, அறிவிப்பு கொடுத்து செயல்படுத்தக்கூடிய அரசை பார்த்திருக்கிறோம். ஆனால் அறிவிப்பு கொடுத்து அதனை திரும்ப பெரும் அரசாக தான் தி.மு.க. அரசு உள்ளது என்பது எனது கருத்து. இவ்வாறு கூறினார்.

Related Posts

Leave a Comment