12 மணி நேர வேலை மசோதா அதிகாரப்பூர்வமாக வாபஸ் …

by Lifestyle Editor

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் மே தின கூட்ட விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அத்துடன் இது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்றார்.

இந்நிலையில் 12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப்பெறப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை அடுத்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக திரும்பப்பெற்றதாக சட்டப்பேரவை செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையின் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2023- ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச் சட்ட முன்வடிவு) (சட்டமன்றப் பேரவை சட்ட முன்வடிவு எண் 8/2023) சட்டப்பேரவையில் ஏப்ரல் 21- ஆம் தேதி அன்று நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னர், இச்சட்ட முன்வடிவின் மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட நிலையில், இச்சட்ட முன்வடிவை அரசு திரும்பப் பெறுவதென முடிவெடுத்ததை அடுத்து, அரசால் திரும்பப் பெறப்பட்டது என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப் பெறுகிறது”. இவ்வாறு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment