திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு இத்தனை சிறப்புகளா …

by Lifestyle Editor

காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கு இடையில் உள்ள தீவு போன்ற பகுதி ஸ்ரீரங்கம். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம், ஆழ்வார்கள் பாடிய 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் தலைசிறந்ததாகவும் கருதப்படுகிறது.

21 கோபுரங்களும் 156 ஏக்கர் பரப்பளவும் கொண்டு இந்த பிரம்மாண்ட கோவில் உலகின் இரண்டாவது பெரிய கோவில் என்று சொல்லப்படுகிறது. இங்கே, முதலில் சோழ மன்னன் தர்மவர்மனால் கட்டப்பட்டதாகவும், காவேரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது இந்த கோயில் மணலால் மூடிப்போனதாகவும் சொல்கின்றனர். பின்னர், முற்கால சோழ மன்னர் கிள்ளிவளவன் கோவில் வளாகத்தை இன்று மீண்டும் கட்டினார் என்று கூறுகின்றனர்.

வைணவ ஆலயங்களிலேயே வருடத்தில் 322 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒரே கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தான் என்று பக்தர்கள் கூறுகின்றனர். உலகில் பல்வேறு இடங்களில் இருந்து வைகுண்ட ஏகாதசி நாட்களில் மட்டும் தோராயமாக 10 லட்சம் பக்தர்கள் இங்கே தரிசனத்திற்காக வருகின்றனர்.

கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதம் இன்றும், பாரம்பரியம் மாறாமல் சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கலாச்சாரம் பண்பாடு மாறாமல் இந்த கோவில் இருப்பதால் 2017ஆம் ஆண்டு யுனெஸ்கே (UNESCO) அமைப்பு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

கலை அருங்காட்சியகம்:

இந்த கோவிலில் கலை அருங்காட்சியகம் 1968 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில், விஷ்ணுவின் தந்தச் சிற்பங்களும், 17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் உருவங்களும் உள்ளன. இதில் மராத்திய காலத்து பாவை விளக்குகள் மற்றும் முற்கால ஆடைகளும், முத்துக்களால் ஆன நடராஜர் உருவம் மற்றும் ஆங்கிலேயர், டச்சு, திருவாங்கூர், ஹைதராபாத், குவாலியர், மாநிலங்களின் நாணயங்களும் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் ஓலைச்சுவடிகள், மிகப் பெரிய கோவில் விளக்குகள் மற்றும் விஜயநகர மன்னர்களின் செப்புத் தகடுகளும் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. அதோடு கோவில் யானைகளின் தந்தங்கள், பழமைவாய்ந்த கோவில் பூட்டுக்களும் உள்ளன.

நந்தவனம்:

ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் மற்றும் கோவில் ஒழுங்குமுறை ஆகியவற்றைச் சீர்ப்படுத்திய பெருமை ராமானுஜரையே சாரும் என்று சொல்லலாம். ராமானுஜர் அவர்கள், ரங்கநாதர் வழிபடுவதில் பூக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தோட்ட பராமரிப்பிற்காகவே ஒரு குழுவை நிறுவினார் என்றும், இந்த நந்தவனத்திலிருந்து தான் ரங்கநாதருக்கும் ரங்கநாயகி தாயாருக்கும் மாலைகள் தயாரிக்கப்பட்டு பூசைகள் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கோவில் நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட மாலைகள் இங்கு பூக்கும் பூக்களைக்கொண்டு கட்டப்பட்டு கோயிலுக்கு அனுப்பப்படுகின்றன.

சமய நூலகம்:

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள நூலகம் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பழங்கால ஓலைச்சுவடிகளும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறன. 1000 புத்தகங்களுக்கு குறைவான புத்தகங்களே இருந்த நிலையில், சில நன்கொடையாளர்களின் பங்களிப்பால் தற்போதுள்ள சேகரிப்பில் மேலும் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் உள்ள சிலைகளும், சிற்பங்களும் தெய்வீக கதைகளும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

Related Posts

Leave a Comment