“திருக்குறள் ஓப்பித்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்”…

by Lifestyle Editor

போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருக்குறளை ஒப்பிக்கும் மாணவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளரின் செயல் பாராட்டுதலை பெற்றுள்ளது.

கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் தாளாளராக உள்ளவர் செங்குட்டுவன். இவர் சொந்தமாக பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், திருவள்ளுவர் தினம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகளிடையே போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். திருவள்ளுவரின் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் உள்ள 10 குறள்களையும் ஒப்பித்து, அதற்கு விளக்கம் கூறும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக 2 லிட்டர் பெட்ரோல் வழங்கப்படும் என்பது தான் அந்த அறிவிப்பு. நேற்று முதல் நாளை புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு இந்த போட்டி நடைபெறும் என தெரிவித்து இருந்தார்.

இதனை அறிந்து, அந்த பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள், செங்குட்டுவனிடம் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் உள்ள 10 குறல்களையும், அதற்கான விளக்கத்தையும் ஒப்புவித்து, தங்களது இருசக்கர வாகனத்திற்கு இலவசமாக 2 லிட்டர் பெட்ரோலை நிரப்பிச் சென்றனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திருக்குறளை ஒப்பித்து, இலவசமாக பெட்ரோல் போட்டு சென்றுள்ளனர். இதேபோல், கடந்த ஆண்டும் செங்குட்டுவன் திருக்குறள் போட்டி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment