35கிமீ தூரத்திலும் தெரியும்.. சபரிமலை அருகே 133 அடி ஐயப்பன் சிலை.. சிலைக்கு உள்ளே மியூசியம் ..

by Lifestyle Editor

கேரள மாநிலம் பத்தனம்திட்டா நகரில் 133 அடி உயரம் கொண்டசபரிமலை ஐயப்பன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தான் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்தியா முழுவதிலும் இருந்து வட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வந்து செல்கின்றனர்.

பத்தனம்திட்டா நகரில் உள்ள சுட்டிப்பாரா மலை உச்சியில் மகாதேவர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் அருகே ரூ.25 கோடியில் 133 அடி உயரத்தில் ஐயப்பன் சிலை ஒன்றை அமைக்க கோயில் டிரஸ்ட் முடிவு செய்துள்ளது. கடல்மட்டத்திற்கு மேல் 400 அடி கொண்ட இக்குன்றின் மீது சிலை அமைக்கப்படுகிறது. 35 கி.மீ தூரத்திற்கு அப்பால் இருந்து பார்த்தாலும் சிலை தெரியும் வகையில் அமைக்கப்படுகிறது. ஐயப்பன் பிறந்த ஊர் என நம்பப்படும் பந்தளத்தில் இருந்து பார்த்தால் கூட இந்த சிலை தெரியும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

இந்த சிலைக்கு உள்புறம் மியூசியம் அமைக்கப்படவுள்ளதாகவும், அதில், ஐயப்பனின் வரலாறும், ஐயப்பனின் நண்பர் வாவர், பந்தளம் அரண்மனை, சபரிமலை, பம்பா, அழுதா நதிகள் உள்ளிட்ட காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப்படவுள்ளது.

சபரிமலை வரும் பக்தர்கள் இனி இந்த பிரமாண்ட சிலையை கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யோக நிலையில் ஐயப்பன் அமர்ந்திருப்பது போன்று இந்த சிலை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவு பெறும் என்றும், இந்த பணிகள் விரைவில் துவங்கும் என்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment