மார்கழியின் சிறப்புகள் என்ன ?

by Lifestyle Editor

மார்கழி மாதம் என்றாலே இறை வழிபாட்டிற்குரிய அற்புதமான மாதமாக ஆன்மீகம் குறிப்பிடுகிறது.

கார்த்திகை மாதம் முடிந்து நாளை மார்கழி பிறக்கிறது. நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. அத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த மார்கழி மாதம் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

மாதங்களில் சிறந்த மாதமான மார்கழியாய் நான் இருப்பேன் என கிருஷ்ணர் அவதரித்து கூறியதாலோ என்னவோ இம்மாதம் அத்துணை போற்றுதலுக்கும் உரித்தான மாதமாய் விளங்குகிறது. தனுர் மாதம் எனவும் குறிப்பிடப்படும் மார்கழி மாதம் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் உகந்த மாதம் ஆக கருதப்படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் பவுர்ணமி தினத்தில் பல்வேறு பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். குறிப்பாக ஆகாய ஸ்தலமாக போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

சூடிக்கொடுத்த சுடர் கொடியான ஆண்டாள் கண்ணனை நினைத்து பாவை நோன்பு இருந்ததால் பெருமாளே அவளை மணமுடித்த படியால், திருப்பாவை நோன்பு கடைபிடித்து பெருமாளை வேண்டுவதற்கும் மார்கழி உரித்தான மாதமானது.

அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கியமான இறை வழிபாடு நாட்களும் இந்த மாதத்தில்தான் அமையப் பெற்றிருக்கிறது. மார்கழி மாத அதிகாலை கோலங்கள் மற்றுமொரு அழகியல் கொண்டவை.

அறிவியல் பூர்வமாக பார்த்தால், மார்கழி மாதத்தில் ஓசோன் மண்டலம் பூமிக்கு மிக அருகில் இருக்கும் என்பது அறிவியலாளர்களால் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. ஆகவே மார்கழி மாத அதிகாலை எழுந்து வெளியில் வந்து கோலமிடுவதென்பது நம் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் விதத்தில் அமைகிறது.

மார்கழி என்றாலே அடுத்து நம் நாவில் மஹோத்சவம் என்ற வார்த்தையும் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு மார்கழியோடும், சென்னையோடும் ஒன்றியிருப்பவை மார்கழி மாத இசைக் கச்சேரிகள்.

வீதிகளில் பஜனைகளாக பாடப்பட்ட திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் பல பாடல்களும் பிரசித்தி பெற்ற திருவையாறு ஆராதனையாக உருவெடுத்தது. அதுவே நூற்றாண்டு காலத்தை தாண்டி மார்கழி மஹோத்சவமாய் சென்னையில் மாதம் முழுவதும் பல தரப்பட்ட இசை நடனக் கலைஞர்களால் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

Related Posts

Leave a Comment