ரூ.405.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,644 புதிய குடியிருப்புகள் – முதலமைச்சர் திறந்து வைத்தார் …

by Lifestyle Editor

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.405.90 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,644 புதிய குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் வாழும் நகர்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் முதன்மையான செயல்பாடாக இருந்தாலும், நகர்ப்புர ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது, அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி முதல்வர் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.12.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.405.90 கோடி செலவில் ஈரோடு, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 15 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 4,644 அடுக்குமாடிக் குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 4,500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 11,300 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.30 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளையும், 350 பயனாளிகளுக்கு குடியிருப்பு மற்றும் மனைகளுக்கான கிரயப் பத்திரங்களையும் வழங்கிடும் அடையாளமாக 8 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment