ஆதாரை இணைக்காவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.. – மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்..

by Lifestyle Editor

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். அதேநேரம், மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் ஒரு யூனிட்டுக்கு ரூ. 8 செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் மலர்விழி கூறியுள்ளார். மேலும், ஆதாரை இணைக்க 2 நிமிடம் போதும், ஆனால் அதற்கு பலர் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை என்றார். இதற்காக மின் கட்டணம் செலுத்தும் இடங்களில் இதற்காக தனியாக கூடுதல் பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், உரிமையாளர்தான் செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆதாரை கொண்டு வருபவர் தனது செல்போன் எண்ணை சொன்னாலும் அந்த ஓ.டி.பி.யை வைத்தே பதிவுசெய்துவிடலாம் என்றார். மேலும், அவர் கூறியதாவது, “ இதில் ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்புதான் என்ற அடிப்படையில் ஆதாரை இணைக்க சொல்கிறோம். சப் மீட்டர் வைத்திருந்தால் அது எங்கள் கணக்கில் வராது. முழு ரீடிங்தான் கணக்கில் எடுக்கப்படும்
2 கோடியே 30 லட்சம் வீட்டு உபயோகிப்பாளர்களில் இதுவரை 5½ லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளனர். ஒரு வீட்டில் ஒரே பெயரில் 2 மின் இணைப்பு இருந்தால் அதை ஆதார் மூலம் கண்டறிந்து ஒரு மீட்டராக கணக்கில் கொண்டு வருவோம்.

இல்லையென்றால் இன்னொரு மீட்டர் அவசியம் என்றால் அதற்கு பொது பயன்பாடு கட்டணமாக யூனிட் 8 ரூபாய் கணக்கில் வரும். ஒருவருக்கு வெவ்வேறு முகவரியில் பல வீடுகள் இருந்தால் அதற்கு 100 யூனிட் மானியம் கிடைக்கும். வாடகைக்கு வீடு வைத்திருப்பவர்கள் சர்வீஸ் கணக்கை வைத்து வாடகைதாரர் பெயரில் கூட ஆதாரை இணைக்கலாம். அதற்கு தடையேதும் கிடையாது.

வீடுகளுக்கு ரீடிங் எடுக்க வருபவர்கள் வழக்கம் போல் வந்து கணக்கெடுப்பார்கள். ஆதாரை இணைத்த பிறகுதான் வருவார்கள் என்பது கிடையாது. மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதிக்கு பிறகும் பணம் கட்டாமல் ஆதாரை 2 நாளில் இணைக்காமல் இருந்தால் மின் இணைப்பு வழக்கம் போல் துண்டிக்கப்படும். 100 யூனிட் மானியம் பெறுபவர்கள் தகுதியான பயனாளிகள் தானா? என்பதை கண்டறியவும் ஆதார் இணைப்பு அவசியமாகிறது. எனவே பொது பயன்பாட்டில் முழு தொகையையும் செலுத்துபவர்கள், வணிக பயன்பாட்டில் மின் கட்டணம் செலுத்துபவர்கள் ஆதாரை இணைக்க வேண்டியது இல்லை” என்று தெரிவித்தார்

Related Posts

Leave a Comment