50% ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வரவில்லை.. புதுச்சேரியில் அதிகாரிகள் குழு ஆய்வில் அதிர்ச்சி

by Lifestyle Editor

புதுச்சேரி அரசு துறைகளில் ஊழியர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என்கிற புகாரின்பேரில், குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளும், ஊழியர்களும் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்றும், இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைவதாகவும் தலைமைச் செயலகத்திற்கு அதிகளவில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை கண்காணிக்க நிர்வாக சீர்திருத்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து தலைமைச் செயலாளர் ராஜீவ் சர்மா உத்தரவிட்டார். அதன் பெயரில் நிர்வாக சீர்திருத்த துறை கண்காணிப்பாளர் கலியபெருமாள் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் ஊழியர்கள் அறைக்கு சென்று சரியாக பணிக்கு வந்துள்ளார்களா என்று பார்வையிட்டனர்.

இதில் 50 சதவீதத்திற்கும் மேல் ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஊழியர்களின் பதிவேட்டை ஆய்வு குழு எடுத்துச் சென்றுள்ளது. இது தொடர்பாக இந்த ஆய்வுக் குழுவினர் தலைமைச் செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் குடிமைப்பொருள் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டது ஊழியர்களுடைய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆய்வு மற்ற அரசுத் துறைகளிலும் தொடரும் என்றும் அதிகாரிகள் குழு தெரிவித்து இருக்கிறது. அதன்படி புதுச்சேரியில் மொத்தம் 32 அரசுத்துறைகள் உள்ளன. இந்த 32 அரசுத்துறை அலுவலகங்களிலும் இந்த குழுவினர் ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment