சுட்டெரிக்க தொடங்கியுள்ள கோடையை எதிர்கொள்ள உதவும் தற்காப்பு விஷயங்கள்..!

by Column Editor

பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயில் சுட்டெரிக்கும் என்ற காலம் மாறிப் போய் இப்போதெல்லாம் மார்ச் மாதத்திலும் கூட வெயில் படாய் படுத்துகிறது.

கடந்த சில மாதங்களாக மழை, பனி என ரம்மியமான சீதோஷ்ண சூழலை நாம் அனுபவித்துக் கொண்டிருந்த நிலையில், மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலும் கூடவே ஒட்டிக் கொண்டு விட்டது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயில் சுட்டெரிக்கும் என்ற காலம் மாறிப் போய் இப்போதெல்லாம் மார்ச் மாதத்திலும் கூட வெயில் படாய் படுத்துகிறது.

குறிப்பாக, தொடர்ந்து சில நாட்களுக்கு வெயில் உக்கிரமாக இருக்கக் கூடிய வெப்ப அலை நாட்டின் பல இடங்களில் பரவத் தொடங்கியிருக்கிறது. வெப்ப அலை நிலவும் சமயங்களில் காற்றில் கூட ஈரப்பதம் இருக்காது. இதனால், சுவாசிக்கும் காற்றில் கூட நீங்கள் வெப்பத்தை உணர வேண்டியிருக்கும்.

வெப்ப அலையின் போது உடலில் உள்ள நீர்ச்சத்து வற்றிப் போகும். தலைவலி, உடல் எரிச்சல், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும். குறிப்பாக, சருமத்தில் ஈரப்பசையின்றி வறட்சியாக காணப்படும்.

ஆகவே, வெப்பத்தில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் சில டிப்ஸ்களை நாம் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம்.

தேவையின்றி வெளியே சுற்றக் கூடாது:

பொதுவாக, நினைத்த நேரத்தில் வீட்டை விட்டு கிளம்பி, நம்முடைய தனிப்பட்ட வேலைகளை நாம் செய்து கொள்வோம். ஆனால், இந்த வெயில் காலத்தில் அப்படியெல்லாம் இல்லாமல் வெயிலுக்கு முன்கூட்டியே அல்லது வெயில் குறைந்த பிறகு வேலைகளை ஒதுக்கி செய்ய பழகுங்கள். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மிகவும் அவசியமற்ற காரணங்களுக்காக வெளியே செல்ல வேண்டாம்.

குளிர்பானங்கள் அவசியம்:

என்னதான் இருந்தாலும் வெயில் நேரத்தில் வெளியே சென்று முடிக்க வேண்டிய சில தவிர்க்க முடியாத வேலைகள் இருக்கும். ஆனால், அதுபோன்ற சமயங்களில் உங்கள் உடலை குளுமைப்படுத்துவது அவசியம். செயற்கை குளிர்பானங்கள், டீ அல்லது காஃபி போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதற்கு மாறாக லெமன் ஜூஸ், பிற பழங்களின் ஜூஸ், இளநீர் போன்றவற்றை நீங்கள் சாப்பிடலாம்.வெயில் நேரத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்து வற்றிக் கொண்டே இருக்கும். அதுபோன்ற சமயத்தில் தொடர்ந்து ஆரோக்கியமான குளிர்பானங்கள் மூலமாக உடலின் நீர் அளவை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நிழல் தேடிக் கொள்ளுங்கள்:

அலுவலகம், வங்கி, ஷாப்பிங் மால் போன்ற உள்ளரங்கு கட்டடங்களில் உங்கள் வேலைகள் இருக்கிறது என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. மாறாக, வெளிப்புறங்களில் நீங்கள் எதையேனும் செய்ய வேண்டியிருந்தால், நிழல் தேடி நின்று அதை செய்யவும். எந்த வாய்ப்பும் இல்லாமல், திறந்தவெளி வெயிலில் நடந்து செல்ல நேரிட்டால் கையில் குடை பிடித்துச் செல்வது அவசியம். அப்படி இல்லாவிட்டால் கேப் அல்லது டவள் வைத்து தலையை போர்த்திச் செல்ல வேண்டும்.

Related Posts

Leave a Comment