பிப்.24 ல் வெளியாகும் வலிமை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு…

by Column Editor

அஜித்தின் ‘வலிமை’படம் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் அஜித்குமார், ஹெச். வினோத் இயக்கத்தில் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ’வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிபதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டிய இந்தப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நடத்துவதிலும், இறுதி கட்ட பணிகளை மேற்கொள்வதிலும் தாமதமானதால், ரிலீஸும் தள்ளிப்போனது. இந்தபடத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்று வங்கியிருக்கிறது. மேலும் வலிமை படம் 178 நிமிடங்கள் நீளம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

அண்மையில் வலிமை படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பொங்கல் பண்டிகையின்போதே வலிமை படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் கட்டுப்பாடுகளால் வலிமை ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில், பிப்ரவரி 24 ஆம் தேதி ‘வலிமை’ படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்தப்படம் வெளியாகும் எனவும் அவர் அறிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் திரையரங்குகளில் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை 50% இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு 100% பார்வையாளார்களுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பிருப்பதால், படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது. பிப்ரவரி 24 ஆம் தேதி வலிமை படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment