பருவத் தேர்வு வினாத்தாள் ஒரு மணி நேரம் இணையதளத்தில் வெளியீடு – உயர்கல்வித்துறை சுற்றறிக்கை..

by Column Editor

ஆன்லைன் பருவத் தேர்வுகள் நடைபெறும் போது வினாத்தாள்களை பல்கலைக்கழகங்களின் இணையதளத்தில் ஒரு மணிநேரம் வெளியிட வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உயர்க்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் , தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில். “ உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர், டிசம்பர் பருவத்தேர்வுகளை பிப்ரவரி 1 முதல் 20-ம் தேதி வரை இணையவழியில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் , நடப்பு பருவத் தேர்வுகள் பிப்ரவரி முதல்வாரத்தில் ஆன்லைனில் தொடங்கப்பட உள்ளன. காலையில் 10 முதல் 1 மணி வரையும், மதியம் 2 முதல் 5 மணி வரையும் என இரு வேளைகளிலும் 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். மாணவர்களுக்கு கேள்வித்தாளை இணையதளம் அல்லது கல்லூரியின் மூலமாக பல்கலைக்கழகங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், வினாத்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய வசதியாக பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் காலையில் தேர்வு நடைபெறும் போது 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரையிலும் வெளியிட வேண்டும். அனைத்து மாணவர்களும் கேள்வித்தாளை பதிவிறக்கம் செய்ததை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இதுதவிர, மாணவர்கள் ஏ4 தாள்களில் விடைகளை 40 பக்கங்களுக்குள் எழுத வேண்டும். விடைத்தாளின் மேல்பக்கத்தில் வலதுபுறம் மாணவர்களின் பதிவு எண், பக்கம் மற்றும் பக்க எண் உட்பட விவரங்களை எழுதி கையொப்பமிட வேண்டும். மாணவர்களுக்கு தேர்வுக்கான வினாத்தாள்களை அனுப்புவதற்கு தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்து, வாட்ஸ்அப் குழு உருவாக்க வேண்டும். தேர்வு முடிந்த அடுத்த ஒரு மணிநேரத்தில் விடைத்தாள்களை மின்னஞ்சல், வாட்ஸ் அப் மூலமாக கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாணவர்கள் தங்கள் தேர்வு விடைத்தாள்களை ஒவ்வொரு பாடத்தேர்வும் முடிந்த ஒரு வாரத்துக்குள் கூரியர் அல்லது தபால் வாயிலாக கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பத் தவறினால் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது “ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment