இந்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லன்னா அது பிரச்சனையை உண்டாக்கிடும்…

by Column Editor

நாம் உண்ணும் உணவுகள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடியவை தான். அனைத்து உணவுகளும் உடலுக்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கியுள்ளன. குறிப்பாக பால் பொருட்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. அதில் பெரும்பாலானோர் அன்றாடம் சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் தான் தயிர். தினமும் ஒருவர் தங்களின் மதிய உணவில் தயிரை சேர்த்துக் கொள்வது நல்லதென பெரும்பாலான நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அந்த தயிரை ஒருசில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியம் தான் சேதமடையும். ஆயுர்வேதத்தில் கூட தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளாக ஒருசில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒருவேளை அப்படி சாப்பிட்டால், அதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இப்போது தயிருடன் எந்த உணவுகளை எல்லாம் சேர்த்து சாப்பிடக்கூடாது, அப்படி சாப்பிட்டால் எம்மாதிரியான பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.

சீஸ்:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று தான் சீஸ். இந்த சீஸை எப்போதும் தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும் மற்றும் உடல்நல குறைவால் அவதிப்பட நேரிடும்.

மீன்:

மீன் சாப்பிடுபவர்கள் ஒருபோதும் அதை தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. தயிரையும், மீனையும் ஒன்றாக சாப்பிட்டால், அது வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். அதோடு, இந்த உணவுச் சேர்க்கை அஜீரண கோளாறு, வாய்வு தொல்லை, வயிற்று வலி, வாந்தி போன்ற பல பிரச்சனைகளுக்கும் வழிகுக்கும். அதோடு மீன் இயற்கையாக சூடான பண்பைக் கொண்டது, தயிர் குளிர்ச்சியானது. ஆகவே இவற்றை ஒன்றாக உட்கொண்டால் அது அசிடிட்டி பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

எண்ணெயில் பொரித்த உணவுகள்:

எண்ணெயில் பொரித்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடாதீர்கள். ஏனெனில் இவை அஜீரண பிரச்சனைக்கு வழிவகுக்கும். இது தவிர, இந்த உணவு காம்பினேஷன் சில தீவிரமான வயிற்று பிரச்சனையை சந்திக்க வைக்கும்.

சிக்கன்/பேரிச்சம்பழம்:

சிக்கன் சமைக்கும் போது, அத்துடன் சிலர் தயிரை சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் இப்படி சிக்கனுடன் தயிரை சேர்த்தால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் பிரச்சனையை உண்டாக்கும். அதேப்போல் பேரிச்சம் பழம் மற்றும் தயிரையும் ஒன்றாக சாப்பிடாதீர்கள்.

வாழைப்பழம்:

வாழைப்பழம் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம். இந்த பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடலாதே தவிர தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் மற்றும் தயிர் ஆகிய இரண்டும் நல்ல காம்பினேஷன் அல்ல. எனவே வாழைப்பழம் சாப்பிட்டால், குறைந்தது 2 மணிநேரம் கழித்து தயிரை சாப்பிடுங்கள்.

மாம்பழம்:

தயிர் மற்றும் மாம்பழம் ஆகிய இரண்டையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது. மாம்பழம் இயற்கையாக சூடானது மற்றும் தயிர் குளிர்ச்சியானது. இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால், உடலில் நச்சுக்கள் உற்பத்தியாகும். இம்மாதிரியான சூழ்நிலையில், ஃபுட் பாய்சன் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

வெங்காயம்:

பலருக்கும் தயிர் மற்றும் வெங்காயத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் பச்சடி பிடிக்கும். வெங்காய பச்சடியின் சுவை நன்றாக தான் இருக்கும். பிரியாணி போன்றவற்றிற்கு இது தான் சரியான சைடு டிஷ்ஷாக இருக்கும். ஆனால் தயிர் மற்றும் வெங்காய காம்பினேஷன் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததல்ல என்று கருதப்படுகிறது. ஏனெனில் சிலருக்கு வெங்காய பச்சடியானது அலர்ஜி, வாந்தி, வாய்வு தொல்லை, அசிடிட்டி போன்ற பிரச்சனையை உண்டாக்குகிறது.

பால்:

தயிர் நன்கு புளித்துவிட்டால், அந்த புளிப்பைக் கட்டுப்படுத்த பலர் அத்துடன் பாலை சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த தயிருடன் பாலை சேர்க்கும் போது, இந்த செயல்பாட்டில் அதன் விளைவு மற்றும் இயல்பு மாறுகிறது. எனவே தயிர் மற்றும் பாலை சேர்த்து சாப்பிடக்கூடாது. இது உங்களின் செரிமானத்தை மோசமாக பாதித்து, அசிடிட்டி பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

Related Posts

Leave a Comment