2 ஒலிம்பிக் மெடல்… “தங்க நாயகன்” மாரியப்பன் தங்கவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

by Column Editor

2016ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மாரியப்பன் தங்கவேலு என்ற உயரம் தாண்டுதல் வீரர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரு மாற்றுத்திறனாளி இளைஞன் திடீரென தங்கத்தை தட்டிப்பறிப்பான் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இதனால் கடந்தாண்டு நடைபெற்ற ஜப்பான் தலைகர் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் அவர் மீது பெரும் எதிர்ப்பை எகிற வைத்தது.

மிகச் சிறப்பாக விளையாடி திறமையைக் காட்டிய மாரியப்பன் நூலிழையில் தங்கப்பதக்கத்தை நழுவவிட்டார். இருந்தாலும் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கத்தை வென்று கொடுத்தார். போட்டிக்கு முன்பும் பின்பும் பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினும் நேரில் அழைத்து வாழ்த்து கூறினார். ஜப்பானிலிருந்து தமிழ்நாடு திரும்பியதும் பேட்டியளித்த மாரியப்பன், தமிழ்நாடு அரசு தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரின் கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றினார். அதன்படி குரூப்-1 பிரிவில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை தலைமைச் செயலகத்தில் வைத்து வழங்கினார். தமிழ்நாடு காகித ஆலையில் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணை மேலாளர் பணி வழங்கப்பட்டது. இச்சூழலில் நடிகர் சிம்பு, மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று இவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment