அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… 31% அகவிலைப்படி உயர்வு; ரூ.3,000 பொங்கல் போனஸ் – முதல்வரின் அசத்தல் அறிவிப்பு!

by Column Editor

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கேற்ப அதற்கு ஈடாக மத்திய, மாநில அரசுகள் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி வழங்குவது வழக்கமான நடைமுறை. அந்த வகையில் ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை ஆகிய இரு மாதங்களில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். கொரோனா காரணமாக கடந்தாண்டிலிருந்து அகவிலைப்படி உயர்த்தப்படாமல் 17 சதவீதமாகவே தொடர்ந்தது. 7ஆவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி 11 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாதம் தான் ஒப்புதல் வழங்கியது.

அதன்பின் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 3 சதவீதமாக உயர்த்தி மொத்தமாக 31 சதவீத அகவிலைப்படி மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசை தொடர்ந்து பஞ்சாப், உத்தரகாண்ட் போன்ற மாநில அரசுகளும் தங்களது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவதாக அறிவித்தன. ஆனால் தமிழ்நாட்டில் இதுகுறித்த எந்த அறிவிப்பு வெளியிடவில்லை. தேர்தல் அறிக்கையில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும், அகவிலைப்படி உயர்வு போன்ற பல்வேறு வாக்குறுதிகளை திமுக கொடுத்திருந்தது.

ஆட்சிக்கு வந்தபின் இதையெல்லாம் மறந்துவிட்டதா என எதிர்க்கட்சி தலைவர்களும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களும் கேள்வியெழுப்ப தொடங்கினர். மேலும் ஓய்வூதியதாரர்கள் ஆங்காங்கே போராட்டத்தையும் நடத்தினர். இருப்பினும் கடந்த வாரம் நடைபெற்ற அரசு ஊழியர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அகவிலைப்படி உயர்த்தப்படும் என சமிக்ஞை கொடுத்துவிட்டார். அதன்படி தற்போது அகவிலைப்படியினை 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஆணை பிறப்பித்துள்ளார்.

அதேபோல சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் பொங்கல் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 1,000 ரூபாய், முன்னாள் விஏஓ உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றோருக்கு 500 ரூபாயும் வழங்கப்படும் என கூறியுள்ளார். கடும் நிதிச் சுமையிலும் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகக் கூறும் அவர், இதற்காக 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment