’மஞ்சப்பை அவமானம் இல்லை.. அடையாளம்.. ‘ – மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்…

by Column Editor

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தடை நீடிக்கிறது. இருப்பினும் மக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை. பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு கடும் கேடு விளைவிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க, கடுமையான நடவடிக்ககளை அரசு எடுத்துவருகிறது.

அதன் ஒரு பகுதியாக ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரம். இதன் மூலம் மக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தினை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயல்படுத்த இருக்கிறது.

இன்று கலைவானர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் விழிப்புண்ர்வு கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். இந்த பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்களுக்கான கண்காட்சியை 23-ந்தேதி அன்று மாலை 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும், மஞ்சப்பை அவமானம் இல்லை.. சுற்றுச்சூழலை காப்பவர்களின் அடையாளம்.. என்று தெரிவித்தார். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும், அதை நாம் நிரூபித்துக் காட்டுவோம் என்றும், அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாடு சுற்றுச்சூழலை காப்பதிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Related Posts

Leave a Comment