8 மாதங்களுக்கு பிறகு அனுமதி… குற்றால அருவியில குளித்தது போல இருக்குதானு பாட ரெடியா மக்களே…!

by Lifestyle Editor

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான இடம். எங்கு சென்றாலும் குற்றாலத்தில் ஒரு குளியல் போட்டு சென்றால் தான் அவர்களின் மனம் திருப்தியடையும். சிலர் அனைத்து பயணங்களையும் முடித்துவிட்டு இறுதியாக குற்றாலத்தில் குளித்து நிறைவுசெய்வார்கள். சீசன் மாதங்களான ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றில் உற்சாகமாக குளியல் போடுவார்கள். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாகவும், வெள்ளப் பெருக்கின் காரணமாகவும் சுற்றலா பயணிகள் கடந்த எட்டு மாதங்களாக அனுமதிக்கப்படாமல் இருந்தனர். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து நாளை தேதி முதல் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2 மீட்டர் இடைவெளியில் பயணிகள் நிறுத்திவைக்கப்பட வேண்டும், காய்ச்சல் கண்டறியும் கருவி கட்டாயம் பயன்படுத்த வேண்டும், பணியாளர்களுக்கு சானிடைசர், கையுறை, முகக்கவசம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தபட்டுள்ளது. கூட்ட நெரிசலை தடுக்க ஒரே நேரத்தில் பிரதான அருவியில் 10 ஆண்களும் 10 பெண்களும், ஐந்தருவியில் 10 ஆண்களும் 10 பெண்களும், பழைய குற்றாலம் அருகில் 5 ஆண்களும் 10 பெண்களும் குளிப்பதற்கு அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related Posts

Leave a Comment