வடிவேலு ரிட்டர்ன்ஸ்… முதன்முறையாக உதயநிதி உடன் கூட்டணி – இந்த காம்போவை இயக்கப்போவது யார் தெரியுமா?

by Column Editor

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலினுடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.

இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவருக்கு, தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் தனுஷ்.

இந்த பொன்னான வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொண்ட மாரி செல்வராஜ், கர்ணன் என்கிற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இப்படம் பல்வேறு விருதுகளையும் வென்று வருவதோடு, பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மாரி செல்வராஜ். இப்படத்தை பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இதுதவிர உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தையும் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் மாரி செல்வராஜ். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது.

இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவும், இப்படத்தில் தற்போது இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அவர் உதயநிதி ஸ்டாலினுடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.

Related Posts

Leave a Comment