‘இந்தியன் 2’ – காஜல் அகர்வாலுக்கு பதிலாக பிரபல நடிகை ?

by Column Editor

‘இந்தியன் 2’ படத்திலிருந்து காஜல் அகர்வால் விலகியதையடுத்து முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வந்தது. விறுவிறுப்பாக படமாக்கப்பட்ட இந்த படம் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே தனியார் ஸ்டுடியோ நடைப்பெற்றது. அப்போது க்ரைன் சரிந்து விழுந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஓன்றரை ஆண்டுகளாக படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருக்கிறது.இந்தியன் 2 படம் துவங்கப்படாததால் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து புதிய தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக்கூடாது என்று படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பலமுறை நீதிமன்றத்திற்கு விசாரணை வந்தபோதும், எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து இருதரப்பும் பேசி சமரச தீர்வுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து இந்த படத்தை அடுத்த மாதம்‌ மீண்டும் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த படத்தில் நடித்த நடிகர் விவேக் மறைந்துவிட்டதால் அவருக்கு மாற்றாக ஒருவரை படக்குழு தேடி வருகிறது. அதேபோன்று கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகை காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக உள்ளதால் படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக படத்தில் நடிக்க வைக்க முன்னணி நடிகையான திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அவரே ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment