அப்போ அது சேறு இல்லையா? மஞ்சும்மல் பாய்ஸ் பட கிளைமாக்ஸில் பயன்படுத்தப்பட்ட ஓரியோ பிஸ்கட் – காரணம் என்ன?

by Editor News

மலையாள திரையுலகில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகி மாஸ் ஹிட் அடித்த படங்களில் ஒன்று மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தை சிதம்பரம் இயக்கி இருந்தார். இப்படத்தில் ஸ்ரீநாத் பாசி, செளபின் ஷபீர் உள்பட ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது.

இப்படத்தின் கதைக்களம் கொடைக்கானலில் உள்ள குணா குகையை சுற்றி நடப்பதால் இதன் பெரும்பாலான காட்சிகள் தமிழில் தான் படமாக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் தமிழ்நாட்டிலும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் சக்கைப்போடு போட்டது. உலகளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து அப்படக்குழுவை ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே தலையில் தூக்கிவைத்து கொண்டாடியது. குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், விக்ரம், உதயநிதி ஸ்டாலின், சிம்பு உள்பட ஏராளமான நடிகர்கள் அவர்களை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்த ஒரு ஆச்சர்ய தகவலை இயக்குனர் சிதம்பரம் பகிர்ந்துள்ளார்.

அதன்படி மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்ததே அதன் கிளைமாக்ஸ் தான். அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதில் நடித்த நடிகர்களின் பங்களிப்பும் முக்கிய காரணம். அதிலும் கிளைமாக்ஸில் சுபாஸாக நடித்த ஸ்ரீநாத் பாசி மீட்கப்படும்போது அவர் உடம்பு முழுக்க ரத்தக் கறை உடன் சேறும் சகதியுமாக இருக்கும்.

அது பார்ப்பதற்கு தத்ரூபமாக இருந்தாலும் அதில் ஸ்ரீநாத் பாசி உடல் முழுக்க பூசி இருந்தது உண்மையான சேறு இல்லையாம். அதற்கு பதிலாக ஓரியோ பிஸ்கட் கிரீமை பயன்படுத்தியதாக இயக்குனர் சிதம்பரம் கூறி இருக்கிறார். அந்த காட்சியில் ஸ்ரீநாத் உடன் நடித்த செளபின் ஷபீரே இந்த தகவலை கேட்டு ஷாக் ஆகிவிட்டாராம். அந்த அளவுக்கு தத்ரூபமாக அதை காட்டி இருந்தார் ஒப்பனைக்கலைஞர் ரோனெக்ஸ் சேவியர். அதுமட்டுமின்றி அந்த காட்சியில் நடிக்கும் போது ஸ்ரீநாத் பாசி உடலில் எறும்பு கடித்ததாம், அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு அவர் நடித்ததாக இயக்குனர் சிதம்பரம் கூறி இருக்கிறார்.

Related Posts

Leave a Comment