வீடியோ பார்த்துக் கொண்டே சாப்பிடும் பழக்கம் இருக்கா.? இந்த பதிவு உங்களுக்குத்தான் ..

by Lifestyle Editor

மனம் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த, உடல் மற்றொரு வேலையை செய்து கொண்டிருக்க, இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலும் பன்முகத்திறன் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அதிலும் சாப்பிடும்போது ஒழுங்காக உணவின் மீது கவனம் செலுத்தாமல் லேப்டாப்பில் வெப் சீரிஸ் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது, செல்ஃபோனில் ரீல்ஸ் பார்த்தபடி சாப்பிடுவது என்பதெல்லாம் இன்றைக்கு இயல்பான விஷயங்களாக மாறி வருகின்றன.

பெரியவர்கள் இதில் விதிவிலக்கு என்று கருத வேண்டாம். அவர்கள் டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுகின்ற பழக்கம் கொண்டிருக்கின்றனர். இதுபோல டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கியபடி சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? ஊட்டச்சத்து ஆலோசகர் அபூர்வா அகர்வால் கூறுவது என்ன என்று இப்போது பார்க்கலாம்.

அதிகம் சாப்பிடுவீர்கள் :

சாப்பிடும்போது டிஜிட்டல் திரையின் மீது கவனம் இருந்தால் நம் மனதின் கவனம் சிதறும். இதனால் நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே தெரியாமல் அதிகமாக சாப்பிட வாய்ப்பு உண்டு. இதனால் செரிமானப் பிரச்சனைகள் உண்டாகலாம் மற்றும் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

டிவி பார்த்தபடி ஸ்நாக்ஸ் சாப்பிடும்போது நம் உடலில் கலோரிகள், சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு போன்றவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதிலும் சிப்ஸ், பிஸ்கட், சோடா போன்றவை நம் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை ஏற்படுத்தும்.

திருப்தி கிடைக்காது :

உணவு சாப்பிடும்போது அதன் சுவையை நாம் உணர வேண்டும் மற்றும் சாப்பிட்டு முடித்த திருப்தி ஏற்பட வேண்டும். ஆனால், நம் கவனமெல்லாம் டிஜிட்டல் திரைகளின் மீது இருப்பதால் உணவு சாப்பிட்ட முழு திருப்தி நமக்கு கிடைக்காது.

என்னென்ன கடைப்பிடிக்க வேண்டும்?

சாப்பிடும் முன்பாக ஒரு கணம் நிதானித்து பெருமூச்சு இழுத்து விட்டுக் கொள்ளுங்கள். இதனால் உணவின் மீதான உங்கள் கவனம் பெருகும்.

உணவின் நிறம், மனம், அதன் தன்மை ஆகிய ஒவ்வொன்றையும் கவனமாக உள்வாங்கி அதற்குப் பிறகு சாப்பிடத் தொடங்கவும். உங்கள் அனைத்தும் உணர்வுகளும் வேலை செய்ய வேண்டும்.

உணவை நன்றாக மென்று, சவைத்து சாப்பிடவும்.

டிவி, லேப்டாப், மொபைல் என எந்தவொரு டிஜிட்டல் சாதனங்கள் இல்லாமல் அமைதியான சூழலில் சாப்பிடவும்.

உங்கள் முன்னால் இருக்கும் உணவு குறித்து பாராட்டு தெரிவிக்கவும். இதனால் உணவின் மீதான உங்கள் கவனம் அதிகரிக்கும்.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நீங்கள் உணவை நிதானித்து உள்வாங்கும்போது உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை ஏற்க தயாராக இருக்கும்.

எவ்வளவு சாப்பிடுகிறோம், சாப்பிட்ட உணவு போதுமானதாக இருக்கிறதா என்பது குறித்து கவனமாக இருக்கவும். இதன் மூலம் தேவையற்ற உணவு தவிர்க்கப்படுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

Related Posts

Leave a Comment