ராமர் கோயிலில் குடமுழுக்கு : விழாக்கோலம் பூண்ட அயோத்தி நகரம்

by Lifestyle Editor

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில், குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. மதியம் 12.20 மணி அளவில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

குழந்தை ராமரின் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்யவுள்ள நிலையில், கோயிலில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய சிறப்பு பூஜைகள் நாளை காலை வரை நடைபெறுகின்றன. கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ராம் லல்லா எனப்படும் குழந்தை ராமர் சிலைக்கு காவிரி நீரால் அபிஷேகம் செய்யப்படவுள்ளது. இதற்காக காவிரி நதி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் தலைக்காவேரியில் இருந்து பூஜித்து கொண்டு வரப்பட்ட நீர், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிடம் வழங்கப்பட்டது.

இதே போன்று, தமிழ்நாட்டின் தருமபுரம் ஆதீனம், சைலாபுரி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்களின் ஆசியோடு காவேரி நீரும் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. குழந்தை ராமருக்கு அணிவிக்கும் வகையில் வெள்ளியால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாதமும் சைலாபுரி ஆதீனம் தரப்பில் அளிக்கப்பட்டது. இந்த பாதமும் குடமுழுக்கு தினத்தன்று காவேரி நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ராமர் கோயிலைச் சுற்றி பூக்களும், வண்ண வண்ண விளக்குகளும் காண்போர் வியக்கும் வகையில் உள்ளன.

கோயில் கட்டுமானத்தின் கலைநயத்தை பிரதிபளிக்கும் வகையில் பிரத்யேக அலங்கார விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. அயோத்தி நகர் முழுவதும் ராமர் தொடர்பான கருத்துருவில் லேசார் ஷோ, அலங்கார வளைவுகள் நிறுவப்பட்டுள்ளன.

ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு, திரையுலக பிரபலங்கள் என சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, நகர் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அயோத்தி வரும் பக்தர்களுக்கென சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, சென்னையில் இருந்து வந்த பக்தர் புருசோத்தம் குப்தா தெரிவித்தார்.இதனிடையே, அயோத்தியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் சேவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் ஈடுபட்டனர். ராமர் கோயில் முழுவீச்சில் குடமுழுக்குக்கு தயாராகி வருவதாலும், பாதுகாப்பு கருதியும் இன்றும், விழா நடைபெறும் நாளான நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விழா அழைப்பிதழ் உள்ளவர்கள் தவிர பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை மறுநாள் முதல் அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 500 ஆண்டு கால காத்தருப்பிற்கு பிறகு அயோத்தியில் ராமர் சிலை நிறுவப்படுவது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment