தை பிறந்தால் வழி பிறக்கும்.. காரணம் என்ன…

by Lifestyle Editor

நம் முன்னோர்கள் உரைத்த பழமொழிகளில் பல ஆழமான அர்த்தங்கள் புதைந்துள்ளன. அவற்றின் உண்மையான பொருள் அறியாமலேயே நாம் அதனை பயன்படுத்துகிறோம். அந்த வகையில் “தை பிறந்தால், வழி பிறக்கும்” என்ற கூற்றை நாம் அறிந்திருக்கிறோம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பொன்மொழிக்கு, மூன்று வெவ்வேறு அர்த்தங்களை கூறுகிறார்கள்.

முந்தைய காலங்களில் போக்குவரத்து வசதிகள் இல்லாத போது, ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்வதற்கோ அல்லது நகரத்திற்கு செல்வதற்கோ விளைநிலத்தை பாதையாக பயன்படுத்தி வந்தனர். தை மாதத்தில் அறுவடை முடிந்து, விவசாய நிலங்கள் போக்குவரத்திற்கு பயன்படுவதற்கு ஏதுவாக அமைந்திருக்கும். எனவே தான், வழித்தடம் தை மாதம் பிறந்தவுடன் கிடைக்கும் என்ற பொருளில் உரைத்துள்ளனர்.

அன்றைய காலங்களில் வரப்புகள்தான் மக்களுக்கு நடைபாதையாக பயன்பட்டன. நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்த பின்பு, வளைந்து நடைபாதையை மூடிவிடும். பாதை கண்களுக்கு புலப்படாது. தை மாதத்தில், அறுவடை முடிந்த பின்பு பாதைகள் நன்றாக தெரியும். மக்கள் செல்வதற்கு வழித்தடம் கிடைக்கும். இதுதான் இந்த பொன்மொழியின் பொருள் என்று சிலர் கருதுகின்றனர்.

மேலும் தை மாதம் வரையில் விவசாயிகள், பயிர்களை விளைவிக்க நிலத்தில் முதலீடு செய்வார்கள். அதுவரை அவர்களின் கையில் பண இருப்பு குறைவாகவே இருக்கும். தை மாதத்தில் அறுவடை செய்த பின்பு பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். அப்போது அவர்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஏதுவாக இருக்கும். எனவேதான் புதுமனை புகுவிழா, திருமணம், பெண் பார்ப்பது என்று அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் தை மாதத்தில் நடைபெறும் வகையில் திட்டமிடுவார்கள். இந்த காரணத்திற்காகவும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறினார்கள்.

தை பிறந்தால் விவசாய மக்களுக்கு வாழ்வாதாரம் பிறக்கும் என்பதாலும், இதனை நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளாகவும் பொருள் கொள்ளலாம்.

Related Posts

Leave a Comment