திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் – 21

by Lifestyle Editor

திருப்பாவை – பாசுரம் 2

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்து உன்னடி பணியுமாப் போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

வள்ளலைப் போல கேட்டதும் பாலைப் பொழியும் பெரும் பசுக் கூட்டத்தைக் கொண்ட நந்தகோபரின் திருமகனே, அடியவர்களைக் காக்கும் அக்கறை உடையவனே, பெருமைகளைக் கொண்டவனே. இந்த உலகின் நிலையான சுடர் ஒளியே. நீ உறக்கத்தை விட்டு எழுந்து வருவாயாக.

உன்னிடம் போரிட்டு உனது வலிமைக்கு முன்பு நிற்க முடியாமல் தோற்றவரெல்லாம் உனது அடியாராக மாறி உன் அடி பணிந்து வந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு உனது அடிகளைப் பற்றிப் பணிந்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை. அதேபோல ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களாகிய நாங்களும், உனது குணநலன்களைப் போற்றிப் பாட வந்து உன் மாளிகை முன்பு காத்திருக்கிறோம். துயில் எழுந்து வந்து எங்களைக் காத்து அருள் வாயாக என்று அழைக்கின்றனர் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

திருப்பள்ளி எழுச்சி பாடல் 1

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம் சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! பாடல் விளக்கம்: உயிர்களுக்கு முதல்வன் நீ, எங்கள் வாழ்வுக்கும் முதல்வன் நீ. உன்னை மலர்களால் அர்ச்சித்து, உன் திருமுகத்தில் காண்கின்ற அந்த அழகிய புன் முறுவலைப் பார்த்து மகிழ்ந்து வணங்குகிறோம்.

சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் மலர் தூவி வழிபட வந்துள்ளேன். எம்பெருமானே! உன் அழகிய முகத்தில் புன்னகை பூத்தபடி எனக்கு அருள் செய்வாயாக!. எங்களுக்காக துயில் நீங்கி, உனது திருப்பள்ளியிலிருந்து எழுந்து எங்கள் உள்ளத்திற்கு வருவாயாக

Related Posts

Leave a Comment