திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் – 20

by Lifestyle Editor

திருப்பாவை – பாசுரம் 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்:

முப்பத்துமுவர் என்று ஆதி தேவர்களான ஏகோதச ருத்ரர்கள், த்வாதச ஆதித்யர்கள், அஸ்வினி தேவர்கள் இருவர் ஆகிய முப்பத்து மூன்று தேவர்களுக்கும், அவர்கள் வம்சத்து தேவர்களுக்கும் ஒரு கெடுதி ஏற்பட்டால் உடனே ஓடிப்போய் முன்னே நிற்கிறான் இறைவான். முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தாலும் பக்தர்களுக்கு ஒரு துயரம் என்றால் முன்னின்று நிற்கும் கலியுக தெய்வமே. எங்கள் குரல் கேட்டு உறக்கம் விட்டு எழுந்திராய்!. தேவர்களைப் போல எங்களுக்கு ராஜ்யங்கள், ஐஸ்வர்யங்கள் வேண்டாம். உன் பக்தர்களான எங்களுக்கு பயமும் இல்லை. உன் அருட் கடாக்ஷத்தையே எதிர்ப்பார்த்து இருக்கிறோம். நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி அச்சத்தை உண்டாக்கும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக. எப்படி தசரதன், தனது மகன் ராமனை தந்தேன்! என்று விஸ்வாமித்திரரிடம் எடுத்துக்கொடுத்தானோ அப்படி உன் மணாளனை தூக்கி எங்களிடம் கொடுத்து விடு என்று வேண்டுகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

திருவெம்பாவை – 20

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்:

சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முந்தைய உன் பாதமலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள மென்மையான திருவடிகளை பணிகின்றோம். எல்லா உயிர்களையும் படைக்கின்ற பொற்பாதங்களை சரணடைகின்றோம். எல்லா உயிர்களுக்கும் இன்ப வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம்.உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகிறோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் கண்டு பெருமிதமடைகிறோம். பிறப்பற்ற நிலை தரும் தங்கத் திருவடிகளை பற்றுகிறோம். உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம் என்று மாணிக்கவாசகர் சிவனின் பெருமையை போற்றிப் பாடுகிறார்.

Related Posts

Leave a Comment