தயிர் அல்லது மோர்… இந்த இரண்டில் ஆரோக்கியம் நிறைந்தது எது..?

by Lifestyle Editor

தயிர் கெட்டியானது. பாலை காய்ச்சி, புளிக்க வைத்த பின்னர் கிடைப்பது. அதே தயிரில் உள்ள வெண்ணெயை பிரித்து எடுத்த பின் கிடைப்பது மோர் ஆகும். மோர் திரவ வடிவில் உள்ளது. இரண்டையும் தான் நாம் விரும்பிச் சாப்பிடுகிறோம். நிச்சயமாக இரண்டுக்குமே தனித்த குணாதிசயங்களும், ஆரோக்கிய பலன்களும் உண்டு. ஆனால், இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது.

தயிரில் நன்மை பயக்கும் பாக்டீரியா குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். அதில் புரதச்சத்து, ப்ரோபயாடிக்ஸ் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆகியவை கிடைக்கும். அதேபோல புளிப்புச் சுவை கொண்ட மோர் நம்முடைய தாகத்திற்கு உகந்த பானமாக இருக்கும். தயிர் மற்றும் மோர் ஆகிய இரண்டுமே செரிமானத்தை மேம்படுத்தக் கூடியதாகும். இந்த இரண்டின் தனித்தன்மை குறித்து இப்போது பார்க்கலாம்.

தயிர் மற்றும் சத்துக்கள்

பாலை நாம் புளிக்க வைக்கும்போது அதில் உள்ள லேக்டோஸ் சர்க்கரை சத்தானது, லேக்டிக் ஆசிட் போல மாறுகிறது. நம் குடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்ற நன்மை பயக்கும் பாக்டீரியா தயிரில் நிறைவாக கிடைக்கும். நம் உடலில் செரிமானத்தை மேம்படுத்தவும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நம் உடல் உறிஞ்சிக் கொள்ளவும் இந்த நன்மை பயக்கும் பாக்டீரியா உதவியாக அமைகிறது. தயிரில் உள்ள மேம்பட்ட புரதச்சத்து நம் தசைகளின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுகிறது. ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் இது உதவியாக அமைகிறது. தயிரில் இருந்து கிடைக்கும் கால்சியம் சத்து நம் பற்களையும், எலும்புகளையும் பலமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தயிரில் உள்ள ப்ரோபயாடிக் சத்துக்கள் நம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றது. தயிரை வாடிக்கையாக சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மோர் பயன்கள்

மோரில் உள்ள லாக்டிக் அமிலம் நம் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தருகிறது. அஜீரணம் மற்றும் அசிடிட்டி ஆகிய பிரச்சனைகளுக்கு இது தீர்வளிக்கிறது. மோரில் புரதம், கால்சியம், விட்டமின் பி12, ரிபோஃபிளேவின் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன.
மோர் நம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுகிறது. மோரில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நம் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உறுதுணையாக அமைகின்றன. குறைந்த கலோரி கொண்ட மோர் அருந்துவதால் நம் உடல் எடை குறையும். ஒட்டுமொத்தமாக நம் உடலுக்கு மோர் குளிர்ச்சி தருகின்றது.

Related Posts

Leave a Comment