7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

by Lifestyle Editor

இந்த உலகில் பிறந்த அனைவருமே தினமும் குறைந்தது ஏழு மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். இல்லையென்றால் பல உடல்நலப் பிரச்சனைகள் வரிசையாக வரும் ஆபத்துள்ளது. குறைவான நேரம் தூங்குபவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இங்கே பார்ப்போம்.

இயற்கை மருந்தாகும் தூக்கம் :

எல்லா கவலைகளையும் மறக்க வைக்க கூடியது தூக்கம். வாழ்கையில் எவ்வுளவு பிரச்சனைகள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் நிம்மதியான தூக்கம் சரி செய்துவிடும். ஆனால் இன்றைய காலத்தில் பலரும் நடு இரவு தாண்டியும் மொபைல் போனை பயன்படுத்திக் கொண்டும், டிவி பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதனால் ஒரு நாளைக்கு ஏழு மணி நேர தூக்கம் அவசியம் என்பதை பெரும்பாலானோர் மீறுகிறார்கள். ஒழுங்காக தூங்கவில்லை என்றால் பல உடல்நலப் பிரச்சனைகள் வரக்கூடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. தினமும் 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு என்ன மாதிரி பிரச்சனைகள் வரும் என்பதை தற்போது பார்ப்போம்.

ஏன் 7 மணி நேர தூக்கம் அவசியம்?

இந்த 7 மணி நேர தூக்கம் நம் உடலில் ஏற்பட்டுள்ள பல பிரச்சனைகளை சீர்படுத்துகிறது. உங்களை புத்துணர்ச்சி ஆக்குகிறது. நம்முடைய அறிவாற்றல் திறனுக்கும், நினைவுகளை ஒருங்கிணைப்பதற்கும், பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் தூக்கம் மிகவும் அவசியம். எப்போதும் கவனமாக இருக்குமாறு உங்கள் மூளையின் சக்தியை தூண்டிவிடுவதும் தூக்கம் தான். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக செயல்பட வேண்டும் என்றால், முறையான தூக்கம் அவசியமாகும். 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும். ஒழுங்காக தூங்கவில்லை என்றால் எரிச்சலும் கோபமும், மன அழுத்தமும் உண்டாகும்.

சோர்வு :

7 மணி நேரத்திற்கும் குறைவாக நீங்கள் தூங்கினால், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்திருக்க மாட்டீர்கள். இதன் விளைவாக காலை எழுந்ததும் சோர்வாக உணர்வீர்கள். இந்த சோர்வு நாள் முழுவதும் நீடிக்கும். இதன் காரணமக எந்த வேலையிலும் உங்களால் கவனம் செலுத்த முடியாது. போதிய நேரம் உங்கள் உடல் ஓய்வெடுக்காததன் காரணமாக உங்களால் எந்த முடிவுகளையும் தெளிவாக எடுக்க முடியாது.

உடல் எடை அதிகரிப்பு :

தூக்கத்திற்கு உடல் எடைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. போதுமான நேரம் தூங்கவில்லை என்றால் உங்கள் உடலில் உள்ள இரண்டு முக்கிய ஹார்மோன்களான ஜெரலின் மற்றும் லெப்டின் சமநிலை பாதிக்கப்படும். இரவு போதிய நேரம் தூங்கவில்லை என்றால் கெரலின் அளவு அதிகரித்து அதிகமாக பசி எடுக்கும். அதே சமயத்தில் லெப்டின் அளவு குறைந்துவிடும். இதன் காரனமாக அதிக கலோரி மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வீர்கள். நாளடைவில் உங்கள் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும் :

உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக செயல்பட வேண்டுமென்றால் நல்ல தூக்கம் அவசியம். இரவு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது நமது உடல் சைடோகைன்ஸை உற்பத்தி செய்து வெளியேற்றுகிறது. தொற்றுகளை எதிர்த்து போராடுவதில் இது முக்கிய பங்காற்றுகிறது. 7 மணி நேரத்திற்கும் குறைவாக நீங்கள் தூங்கினால், இந்த சைடோகைன்ஸ் சரியான அளவு உற்பத்தியாகாமல் போகும். இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகி அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் போன்றவை ஏற்படும்.

மனநல பாதிப்புகள் :

தூக்கமும் மன நலமும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துள்ளது. போதுமான தூக்கம் இல்லையென்றால் உங்கள் உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்காது. அடிக்கடி உங்கள் மனநிலை மாறும். அதிகமாக கோபம், எரிச்சல் வரும். இது நாளாக நாளாக மன அழுத்தத்தை கொண்டு வரும். தொடர்ந்து இப்படியே குறைவான நேரம் தூங்கினால், அது மனநல பாதிப்புகளுக்கு காரணமாகிவிடும்.

அறிவுத்திறன் குறைபாடு :

உங்கள் மூளை நன்றாக செயல்பட வேண்டுமென்றால் நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். நமது நினைவுகளை ஒருங்கிணைக்கவும், பிரச்சனைகளை தீர்க்கவும் எதையும் கற்கவும் நல்ல தூக்கம் அவசியமாகும். 7 மணி நேரத்திற்கும் குறைவாக நீங்கள் தூங்கினால், உங்கள் அறிவாற்றல் திறன் பாதிப்பிற்குள்ளாகும். எதிலும் உங்களால் கவனம் செலுத்த முடியாது; சில விஷயங்கள் எளிதில் மறந்துவிடும்; எந்தவொன்றையும் புதிதாக கற்க முடியாமல் போகலாம்.

Related Posts

Leave a Comment