மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..

by Editor News

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரையில் நடைபெறுகின்ற திருவிழாக்களிலேயே மிக முக்கியமாக பார்க்கப்படுவது சித்திரை திருவிழா. இந்த சித்திரை மாத திருவிழாவின் போது தான் அழகர் வைகை ஆற்றில் இறங்குகின்ற நிகழ்வும் நடைபெறும். அதேபோன்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். ஆகையால் சித்திரை மாதம் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. கோயில் மண்டபத்தின் அருகில் இருக்கக்கூடிய தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் , மீனாட்சி சுந்தரேஸ்வரர் அழைத்துவரப்பட்டு , சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க பொதுமக்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து 12 நாட்களுக்கு காலையும் மாலை என இரு வேலைகளிலும் , நான்கு மாசி வீதிகளில் மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் சுவாமி பரிவார மூர்த்திகளுடன் வீதியுலா நடைபெறும் . ஏப்ரல் 30ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பட்டாபிஷேகம் நடைபெறும் . அதனை தொடர்ந்து 1ம் தேதி திக்விஜயமும், முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 2ம் தேதியும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மே 3ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேர் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் நிறைவு பெறும் அதே வேளையில் 3ம் தேதி கள்ளழகர் விழா தொடங்கி, 4ம் தேதி அங்கிருந்து வரக்கூடிய எதிர்சேவை நிகழ்வும், ஐந்தாம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெற இருக்கிறது.

இந்த இரு நிகழ்வுகளும் மதுரையின் முக்கிய நிகழ்வுகளாக கருதப்படுவதால் பல்வேறு விரிவான ஏற்பாடுகளை காவல்துறையினரும், கோவில் நிர்வாகமும் செய்து இருக்கின்றனர். கோடை காலம் என்பதால் கோவிலை சுற்றி நிழல் தரும் வகையில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. காவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து 12 நாட்களுக்கு மதுரை மாநகரே விழாக்கோலம் பூண்டிருக்கும்…

Related Posts

Leave a Comment