தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா .. கவனமாக இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல் ..

by Lifestyle Editor

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முதியோரும், இணை நோய் உள்ளவர்களும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து தினமும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி வருகிறார். ஏப்ரல் 10 ஆம் தேதி, 63 வயது இருதய நோயாளி கொரோனாவுக்கு பலியாகினார். ஏப்ரல் 11 ஆம் தேதி, 87 வயது நபர் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக நோய் கொண்டவர் உயிரிழந்தார். அதே போல் 12 ஆம் தேதி, 96 வயது கொண்ட சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கொண்டவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

தற்போது பரவி வரும் கொரோனா தீவிரமானது அல்ல என்று கூறப்பட்டாலும் இணை நோய் கொண்டவர்களுக்கும் முதியவர்களுக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதையே இந்த மரணங்கள் உணர்த்துகின்றன. கொரோனா வைரஸ் கடந்த மூன்று வருடங்களில் பல உருமாற்றங்கள் அடைந்துள்ளன. அதில், டெல்டா என்ற உருமாறிய வைரஸ் தான் உலகம் முழுவதும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது பரவும் XBB 1.16 வகை கொரோனா வீரியம் குறைந்ததுதான். ஆனால் அனைவருக்கும் அல்ல என்கிறார்கள் மருத்துவர்கள்.

சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்காதவர்கள், நாள்பட்ட சிறுநீரக நோயாளிகள், புற்றுநோயாளிகள் போன்ற இணை நோய் கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸை உடலில் ஒட்டிக் கொள்ளும் செல்கள் அதிகமாக இருக்கும் என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருந்தியல் துறை தலைவர் பரந்தாமன் கூறுகிறார்.

மேலும் குழந்தைகளுக்கு அறிகுறிகள் அல்லது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் முதியவர்கள் அவர்களிடமிருந்து தனித்து இருத்தல் அவசியம் என்கிறார் மருத்துவர் பரந்தாமன். குழந்தைகளுக்கு தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படாது என்றாலும், அவர்களிடமிருந்து முதியவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அது தீவிர பாதிப்பாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment