கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு நாட்டில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு… யோகா குரு ராம்தேவ் பகீர் தகவல்

by Lifestyle Editor

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பிறகு நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று யோகா குரு ராம்தேவ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில் உள்ள மிராமர் கடற்கரையில் பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி யோக் சமிதி சார்பில் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு யோகா முகாம் நடைபெறுகிறது. இந்த யோகா முகாமின் தொடக்க நாளை முன்னிட்டு நேற்று மிராமர் கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் யோகா குரு பாபா ராம்தேவ், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பாபா ராம் தேவ் பேசுகையில் கூறியதாவது: புற்றுநோய் மிகவும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பிறகு நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் கண்பார்வை, செவித்திறன் ஆகியவற்றை இழந்துள்ளனர்.

இந்தியா உலகளாவிய ஆரோக்கிய மையமாக இருக்க வேண்டும் என்பது நமது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு. கோவா ஆரோக்கியத்தின் மையமாக இருக்க வேண்டும் என்பது எனது கனவு. சுற்றுலாப் பயணிகள் கோவாவை சுற்றிப்பார்க்க மட்டும் வராமல், ரத்த அழுத்தம், தைராய்டு, புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சை பெற வேண்டும். யோகா, ஆயுர்வேதம், சனாதன் மற்றும் ஆன்மீகத்திற்கான சுற்றுலா மையமாக கோவா மாற வேண்டும்.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை (கோவாவில்) குறைவாக இருக்கும் இரண்டு மாதங்களில், ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தலாம். உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருவார்கள். ஆயுர்வேதத்தில் ஐந்து படி நச்சு நீக்கும் சிகிச்சையான பஞ்சகர்மாவை ஹோட்டல் துறையினர் தங்கள் நிறுவனங்களில் அறிமுகப்படுத்தி, தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு யோகாவை அறிமுகப்படுத்த வேண்டும். கோவா சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் ஒரு குகையாக இருக்கக்கூடாது. உண்பதும், குடிப்பதும் இறப்பதும் மட்டுமல்ல வாழ்க்கை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment