சபரிமலை : ஜோதி வடிவில் பொன்னம்பல மேட்டில் காட்சியளிக்கும் ஐயப்பன் ..

by Lifestyle Editor

சபரிமலையில் இன்று மகரஜோதி. திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கேரளாவின் சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக ஆண்டு தோறும் 60 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா காரணமாக ஜோதி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் சபரிமலைக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு மகர ஜோதியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்திருக்கின்றனர். ஜோதியை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் கூடாரமிட்டு காட்டுப்பாதையில் தங்கியுள்ளனர்.

சபரிமலையின் பொன்னம்பல மேட்டின் ஜனவரி 14ம் தேதியான இன்று மகர ஜோதி தெரியும். இந்த ஜோதியை காண தமிழ்நாடு மட்டுமல்லாது தென் மாநிலங்களின் பல மூலைகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். கேரள மக்களின் வழக்கப்படி அவர்களுக்கு ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தி மாதம் அதாவது மகர மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தின் முதல் நாளில் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி தருகிறார் என்பது ஐதீகம்.

ஐயப்பனை தரிசிக்க பந்தளம் மகாராஜா மகர சங்கராந்தியின் முதல் நாளில் சபரிமலைக்கு செல்வார். ஐயப்பன் பந்தளம் ராஜ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பின்னர்தான் சபரிமலைக்கு சென்று தெய்வீக சக்தி பெற்று தெய்வமானார். எனவே அதன் பிறகு பந்தள மன்னர் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு வரும் போது ஐயப்பனுக்கு அணிவிக்க ஆபரணங்களை கொண்டு வருவார். அதே போலவே அதை பின் பற்றி பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஆபரணங்கள் தற்போதும் ஆண்டுதோறும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு இரு தினங்களுக்கு முன்பு அரண்மனையிலிருந்து ஊர்வலம் ஆக புறப்படும்.

இந்த ஆபரணப்பெட்டியானது மகர ஜோதி நாள் மாலை சரம் குத்தி வந்தடைந்து அங்கிருந்து மேளதாள முழக்கங்களுடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 18 படிகளை கடந்து கொண்டுவரப்படும். பின்னர் இப்பெட்டியில் உள்ள ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். தீபாராதனை நடந்து முடிந்து அப்போதுதான் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இது ஒரு கண்கொள்ளா காட்சியாகும். முழுவதுமாக இருட்டிய பின்னர் மலை எது, வானம் எது என தெரியாமல் இருக்கும் நிலையில் பக்தர்களின் ‘ஐயப்ப சரணம்’ கோஷம் விண்ணை பிளக்க அதிரும் வேளையில் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி ரூபத்தில் காட்சியளிப்பார்.

பொன்னம்பல மேட்டில் தெரியும் மகர ஜோதியும், மகர ஒளியும் வெவ்வேறு என்று சொல்லப்படுகிறது. மகர ஜோதி பொன்னம்பல மேட்டில் உள்ள பழங்குடியின மக்களால் ஐயப்பனை தரிசிக்க காலம் காலமாக மகர சங்கராந்தி நாளில் ஏற்றப்பட்டு வருவதாகவும், ஆனால் மகர ஒளி என்பது மகர சங்கராந்தி தினத்தன்று பொன்னம்பல மேட்டின் உச்சியில் தெரியும் ஒரு நட்சத்திரம் என்றும் ஐதீகமாக சொல்லப்படுகிறது.

சங்கராந்தி அன்று மாலை வேளையில் கிருஷ்ணப் பருந்து ஒன்று பொன்னம்பல மேடு பகுதியையொட்டியவாறு பறக்கும். அது பறந்து சென்ற பின்னர்தான் இந்த நட்சத்திரம் தெரியும் எனவும் கூறப்படுகிறது.

திருவாபரணம்

இது சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ‎ சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணம் ஆகும். மூன்று பெட்டிகளில் உள்ள புனிதமான ஆபரணங்களை, மகரவிளக்கு திருவிழா ‎நடைபெறுவதற்கு மூன்று நாள் முன்னதாக, பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு (80 கி.மீ) தலைச்சுமையாக ஊர்வலமாக நடந்துப் புறப்படும்.

இந்த ஆபரணப் பெட்டியைச் சுமப்பதற்காகவே, பாரம்பரியமாகவே சில குடும்பங்கள் இருக்கின்றன. மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு இந்த திருவாபரணம் அணிவித்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறும்.

18 படிகளின் தத்துவங்கள்

18 படிகளின் தத்துவங்கள் குறித்து பல்வேறு ஐதீகம் உள்ளது. ஐம்பொறிகள், ஐம்புலன்கள், ஐந்து கோயில்கள், மூன்று மலங்கள் இவற்றைக் கடந்து மனமொன்றி வழிபட்டாலே ஐயப்பசாமியின் திருவருள் நம்மை வந்து சேரும் என்பதே 18 படிகளின் தாத்பர்யமாகும்.

அதே போல சபரிமலையில் இருகரத்தனாய்ச் சின்முத்திரை பாலித்து யோக நிலையில் அமருவதற்கு முன்பு, ஐயன் தன் 18 ஆயுதங்களைப் பதினெட்டுப் படிகளோடு ஐக்கியமாகும்படி செய்தாராம். இப்பதினெட்டுப் படிகளேறி ஐயனைத் தரிசிக்கும் அன்பர்களை அவன் தன் பதினெட்டு ஆயுதங்களும் சூழ்ந்து எவ்வித ஆபத்தும் வராமல் காக்குமாம். இவையே ஐயனைச் சூழ்ந்திருக்கும் பதினெட்டு மலைகளையும், பதினெட்டுப் படிகள் பற்றிய தத்துவங்கள் எனவும் கூறப்படுகிறது.

1. சபரி மலை

2. பொன்னம்பல மேடு

3. கவுண்ட மலை

4. நாக மலை

5. சுந்தர மலை

6. சிற்றம்பல மேடு

7. கல்கி மலை

8. மாதங்க மலை

9. மைலாடும் மலை

10. ஸ்ரீ மாத மலை

11. தேவர் மலை

12. நீலக்கல் மலை

13. தலப்பாறை மலை

14. நீலி மலை

15. கரி மலை

16. புதுச்சேரி

17. அப்பாச்சி மேடு

18. இஞ்சிப் பாறை.

நவக்கிரகங்களும் அவற்றின் அதிதேவதைகளுமாகப் பதினெட்டுத் தேவதைகள் (கிரகங்கள் 9 + அதிதேவதைகள் 9 = 18) இப்படிகளில் வீற்றிருந்து படியேறிவரும் பக்தர்களின் கிரஹ தோஷங்களைப் போக்குகிறார்கள்.

பதினெட்டுப் படி ஏறிவரும் பக்தர்கள் கர்மேந்திரியங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, அன்னமயகோசம் முதலான கோசங்கள் 5, மற்றும் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் 3 ஆகியவற்றைக் கடந்து உள்ளுறையும் ஆத்மனையே ஐயப்பனாகத் தரிசிக்கிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

Related Posts

Leave a Comment