திருச்சி பள்ளப்பட்டி ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு!

by Lifestyle Editor

திருச்சி மாவட்டம் பள்ளப்பட்டியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் பங்கேற்றன. இதேபோல் காளைகளை அடக்க 350 வீரர்கள் களமிறங்கினர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை இளைஞர்கள் தீரமுடன் திமிலை பிடித்து அடக்கி ஏராளமான பரிசுகளை வென்றனர். இதேபோல், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் சசி கில்பர்ட்(26) என்பவர், களத்தில் காளையை பிடிக்க முயன்றார். அப்போது, காளை அவரது நெஞ்சில் எட்டி உதைத்தது. இதில் நிலைகுழைந்த சசிகில்பர்ட் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். அவரை சக வீரர்கள் மீட்டு அங்கிருந்த மருத்துவரிடம் அழைத்துச்சென்றனர். ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனை அடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று சசி கில்பர்ட் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே பொங்கல் பண்டிகையை ஒட்டி திருச்சி மாவட்டத்தில் பெரிய சூரியூர், நவலூர் குட்டப்பட்டு, கூத்தைப்பார் மற்றும் பள்ளப்பட்டி என மொத்தம் 4 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 3 இடங்களில் காளைகள் முட்டியதில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment