சுனாமி 17 ஆம் ஆண்டு நினைவு தினம்.. கடலில் மலர்தூவி பொதுமக்கள் அஞ்சலி..

by Lifestyle Editor

தமிழக மக்களின் மனதில் நீங்காத வடுவாக பதிந்துபோன நாள் டிசம்பர் 26.. 17 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் 26 டிசம்பர் 2004) பல்லாயிரக்கணக்கான உயிர்களை தன் ஆழிப்பேரலையால் கடல் காவு வாங்கிய தினம். இத்தணை ஆண்டுகள் கடந்தும் சுனாமியின் வடு நம் மனதில் இருந்து ஆறவில்லை.

இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உருகுலைந்துபோயின. மேலும் இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் நாடுகளில் கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன.

யாருமே கடலின் அப்படி ஒரு கோர தாண்டவத்தை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. சுமார் 30 மீட்டர் உயரத்திற்கு எழும்பிய சுனாமி ஆழிப்பேரலை, 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேரை கடலுக்குள் சுட்டிக்கொண்டு சென்றது. இந்த பேரிடரில் 43 ஆயிரத்து 786 பேர் காணாமல் போனார்கள்.. தமிழகத்தில் சென்னை, புதுவை, கடலூர் என கன்னியாகுமரி வரை சுனாமியின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமானது.

தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில் அதிகபட்சமாக நாகையில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேல் இறப்பு பதிவானது. கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் இறந்துபோயினர். கடலின் கோபம் தனிந்தபிறகு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொத்துகொத்தாக உடல்கள் கரை ஒதுங்கிக் கிடந்தன. தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து பலர் கதறினர்.

இந்தச் துயரச் சம்பவத்தின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மக்கள் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment