நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்… – மோடி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து…

by Editor News

40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஜாம்பவனாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். பெங்களூருவில் நடத்துனராக பயணத்தை தொடங்கி, தற்போது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் ரஜினிகாந்த், இதுவரை 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். திரையிலகில் நடித்து வரும், நடிக்க நினைக்கும் இளம் நட்சத்திரங்கள் பலருக்கும் ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் , விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் முழுவதும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் அமர்க்களப்படுகிறது. இந்திய அளவில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

அந்தவகையில் பிரதமர் மோடி ட்விட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில், ‘‘ரஜினிகாந்த் ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் தனது படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான நடிப்பால் மக்களை ஊக்கப்படுத்தினார். ரஜினி நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிக்கட்டும் ’’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும். உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்.” என்று வாழ்த்தியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ரஜினிக்கு வாழ்த்துகூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று தனது 72 ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பரும், தமிழ் திரையுலகில் இன்றளவும் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவரும், ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், பத்மவிபூஷன் தாதா சாகெப் பால்கே விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவரும், ’சூப்பர் ஸ்டார்’ என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். திரு ரஜினிகாந்த் அவர்கள் இறை அருளால் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்ந்து உயர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, திரு. ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment