டீ-யுடன் பிஸ்கட் தொட்டு சாப்பிட்டால் சர்க்கரை அளவை அதிகரிக்குமா..?

by Lifestyle Editor

டீ- காதலர்களுக்கு மட்டும்தான் தெரியும் ஒரு கப் சுவை என்னவெல்லாம் செய்யும் என… சிலருக்கு டீயுடன் சேர்த்து கண்டிப்பாக ஒரு பிஸ்கட் இருந்தே ஆக வேண்டும். அந்த பிஸ்கட்டை டீ-யில் முக்கி எடுத்து சாப்பிடுவது அலாதியான சுவையாக இருக்கலாம். அதனால் சில பக்கவிளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்பது உங்களுக்கு தெரியுமா..?

உடல் பருமன் :

பிஸ்கட்டுகளில் அதிகமாக ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்பு உள்ளது. இவை கொழுப்பு அல்லாத உணவுப்பொருள் அல்ல. எனவே நீங்கள் தினமும் பிஸ்கடுடன்தான் டீ குடிப்பேன் என அடம்பிடித்தால் உங்களுக்கு எதிர்காலத்தில் உடல் பருமன் பிரச்சனை மற்றும் சருமப்பிரச்சனைகள் வரலாம்.

இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் :

பிஸ்கட் என்றாலே சர்க்கரை அதிகமாகவே இருக்கும். அப்படி சர்க்கரை நிறைந்த பிஸ்கட்டுகளை தினமும் சாப்பிடுகிறீர்கள் எனில் உங்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது உறுதி. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை நிறைந்த பிஸ்கட்டை டியுடன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடும். பிஸ்கட்டில் சோடியம் அதிகமாக இருப்பது கூடுதல் ஆபத்து. எனவே சர்க்கரை நோயாளிகள் மற்றும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் டீயுடன் பிஸ்கெட் தொட்டு சாப்பிடவே கூடாது.

நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும் :

பொதுவாக சர்க்கரை நிறைந்த பானம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும். எனவேதான் மருத்துவர்கள் சர்க்கரையை குறைக்க சொல்கிறார்கள். அந்தவகையில் பிஸ்கட் சர்க்கரை நிறைந்தது. எனவே நீங்கள் நீண்ட நாட்களுக்கு டீயுடன் பிஸ்கட் தொட்டு சாப்பிடுகிறீர்கள் எனில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவில் பலவீனமாக்கலாம். எனவே இந்த பழக்கத்தை இன்றே கைவிடுவது நல்லது.

மலச்சிக்கலை உருவாக்கும் :

பிஸ்கட் சுத்தீகரிக்கப்பட்ட மாவில் செய்யப்படுவதால் நார்ச்சத்து சுத்தமாக இருக்காது. எனவே நீங்கள் தினமும் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கலாம். இது தவிர BHA மற்றும் BHT என இரு மூலக்கூறுகள் இருப்பது உடல் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும்.

பற்கள் சேதமாகலாம் :

பிஸ்கட்டுகள் சர்க்கரை நிறைந்தது. சர்க்கரை பொதுவாகவே பற்களை அரித்து சேதப்படுத்தும். இதனால் பல் சொத்தை உருவாகும். இந்நிலையில் சர்க்கரை நிறைந்த பிஸ்கட்டை டீயுடன் தொட்டு சாப்பிடுவது நிச்சயம் உங்கள் பற்களை சேதப்படுத்தும். பல் சொத்தையை உருவாக்கும். பற்களின் வேர்களை அரிக்கச் செய்யலாம்.

குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் :

பொதுவாகவே மாவுப்பொருட்கள் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அந்த வகையில் பிஸ்கட் மைதா மாவில் செய்யப்படுவது என்பதால் நிச்சயம் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். வயிற்றை மந்தமாக்கும். இதில் எந்த வகை ஊட்டச்சத்தும் இல்லை என்பதால் உடல் எடையை அதிகரிக்கும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும், நோய் தொற்று, இதய பாதிப்பு,கொலஸ்ட்ரால் பிரச்சனை, செரிமானமின்மை போன்ற பிரச்சனைகளை உருவாக்கலாம்.

பசியின்மை :

டீயுடன் பிஸ்கட் தொட்டு சாப்பிடும்போது அதன் சுவை நமக்கு மேலும் மேலும் சாப்பிட வைக்கும். எனவே நம்மை அறியாமல் அளவுக்கு அதிகமாக பிஸ்கட்டுகளை சாப்பிட்டுவிடுவோம். இப்படி தினமும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் பசியின்மையை உருவாக்கும். வயிற்று செரிமானமின்மை, நெஞ்சு எரிச்சல், வயிற்று மந்தம், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். ப்பசியின்மை காரணமாக ஊட்டச்சத்து குறைபாடும் உருவாகும்.

இதயத்தை பாதிக்கலாம் :

பிஸ்கட்டுகளில் உப்பும் சேர்க்கப்படுகிறது. இது அதிக சோடியம் நிறைந்த உணவுப்பொருள் என்றும் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக 25கிராம் பிஸ்கட் பாக்கெட்டில் 0.4கிராம் உப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு நாளைக்கான சோடியம் அளவை அதிகரிக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் உருவாகலாம். அதனை தொடர்ந்து பக்கவாதம், இதய செயலிழப்பு ஆகியவையும் உருவாக வாய்ப்பு உள்ளது. அதிக சோடியம் உடலின் நீரிழப்பையும் உருவாக்கும் என்பதை நினைவில் கொள்க.

பதப்படுத்தப்படும் பொருட்கள் :

பாக்கெட்டில் அடைத்து வைக்கப்படும் பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்தப்படும் மூலக்கூறுகள் சேர்க்கப்படுகிறது. அந்தவகையில் ப்யூட்டிலேட்டட் ஹைட்ராக்சியானிசோல் (bha) மற்றும் பியூட்டிலேட்டட் ஹைட்ராக்ஸிடோலூயின் (bht) ஆகிய மூலக்கூறுகள் சேர்க்கப்படுகிறது. இவை இரண்டும் மனித இரத்த செல்களுக்கு ஆபத்து நிறைந்தவை என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு சோடியன் பென்சோயேட் இருப்பது ஆரோக்கியமான DNA-க்களை தாக்குவதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment