புனித வெள்ளி ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் முக்கியத்துவம் என்ன?

by Lifestyle Editor

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் புனித வெள்ளியும் ஒன்று. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாள் தான் புனித வெள்ளியாகவும், அவர் மீண்டும் உயிர்ந்தெழுந்த நாள் ஈஸ்டர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த புனித வெள்ளி கிறிஸ்தவர்களின் கொண்டாட்ட நாள் கிடையாது. இது அவர்களின் துக்கநாள்.. புனித வெள்ளி ஏன் துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது? அதன் வரலாறு என்ன? முக்கியத்துவம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்..

மனித குலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காககவும், இறை வாழ்வை மனிதர்களுக்கு அளிப்பதற்காகவும் பல துன்பங்களை அனுபவித்த இயேசு சிலுவையில் அறைந்து உயிர் துறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர்நீத்த நாளை நினைவுகூரும் விதமாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இது பெரிய வெள்ளி, கருப்பு வெள்ளி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. புனித வெள்ளி என்பது துக்கம், தவம், உண்ணாவிரதம் ஆகியவற்றை கடைபிடிக்கும் ஒரு நாளாகும்.

இயேசு கிறிஸ்து மக்களுக்கு எண்ணற்ற அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்தினார். நோய்களை குணமாக்கினார். பேய்களை விரட்டினார். இதனால் ஏராளமான மக்கள் அவரை பின்பற்றினர். மற்றொரு சாரர் அவரை வெறுத்தனர். அவருடைய வீழ்ச்சிக்காக காத்திருந்த சிலர் அவரை நம்ப மறுத்தனர்.30 வெள்ளி காசுக்கு ஆசைப்பட்டு இயேசுவை காட்டி கொடுத்தார் யூதாஸ்.

அன்பு, மன்னிப்பு, அமைதி ஆகியவற்றை தன் வாழ்க்கையில் கடைபிடித்த இயேசு கிறிஸ்துவை, மக்கள் பொய் குற்றஞ்சாட்டி மரண மேடைக்கு அனுப்பினர். ஆளுநர் பிலாத்து இயேசுவை குற்றமற்றவர் என அறிவித்தார். ஆனால் விடாப்பிடியாக மக்களில் சிலர் இயேசுவை கொல்ல வேண்டும் என வலியுறுத்தினர். யூத ஆட்சியாளர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு எல்லாவிதமான உடல், மன சித்திரவதைகளையும் கொடுத்து, பின்னர் அவரை சிலுவையில் அறைந்தனர். அன்றைய நாள் வெள்ளிக்கிழமை. அதனால் தான் இதை புனித வெள்ளி என்கிறார்கள்.

பைபிளில் இயேசு கிறிஸ்து சுமார் 6 மணி நேரம் அறையப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இயேசுவை சிலுவையில் அறையும் போது அவரது மரண தருவாயில், 3 மணி நேரமாக எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை அன்று உயிர்த்தெழுந்தார். அந்த நாள் தான் ஈஸ்டர் என கொண்டாடப்படுகிறது.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 23 வரையிலான காலக்கட்டத்தில் தான் புனித வெள்ளி கடைபிடிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு புனித வெள்ளி மார்ச் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருப்பார்கள். இதுதான் தவக்காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தவக்காலத்தில் சிலர் வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு இருப்பார்கள். இந்த ஆண்டு தவக்காலம் பிப்ரவரி 14-ம் தேதி கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது.வரும் மார்ச் 31-ம் தேதி ஈஸ்டர் தினத்துடன் இந்த தவக்காலம் முடிவடைகிறது.

புனித வெள்ளி அன்று தேவாலங்களில் துணியால் மூடி, துக்கம் அனுசரிப்பார்கள். தங்கள் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு மனம் மாறும் நாளாக புனித வெள்ளி பார்க்கப்படுகிறது. இந்த நாளில் தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்ந்து மனமுருகி மக்கள் பிரார்த்தனை செய்வார்கள்.

இது துக்க நாள் என்பதால் இயேசுவின் தியாகத்தை போற்ற வேண்டும். கருப்பு ஆடை அணிந்து மௌனத்தை கடைபிடிக்க வேண்டும். தேவாலய நடைமுறைக்கு ஏற்ப உண்ணாவிரதம், மதுவிலக்கு ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

Related Posts

Leave a Comment