டயாபடீஸ் நோயாளிகளுக்கு கால் பாதங்களில் வரக்கூடிய பிரச்சனைகள்..

by Lifestyle Editor

உங்கள் கால் பாதம் தான் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை தெரியப்படுத்தும் கண்ணாடியாக இருக்கிறது. கால் பாதங்களில் காயம் ஏற்படும் வரை காத்திருக்காமல் அடிக்கடி உங்கள் கால் பாதத்தை அக்கறையோடு கவனியுங்கள். ஏனென்றால் அவைதான் உங்களுக்கு இருக்கும் உடல்நலக் கோளாறுகளை எச்சரிக்கை செய்யக்கூடியதாக இருக்கும்.

உங்கள் கால் பாதம் அடிக்கடி உணர்வில்லாமல் இருந்தால், அது டயாபடீஸ் நோயின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். நம் உடலில் சர்க்கரை அளவு உயரும் போது பாதத்திற்கு செல்லக் கூடிய நரம்புகள் செயல்படாமல் போகின்றன. ஆகையால் பாதங்களில் ஏற்படக் கூடிய புண்கள், வெட்டுகள், காயங்களை கவனிக்காமல் இருக்காதீர்கள். உங்கள் பாதத்தில் கூச்ச உணர்வோ அல்லது மரத்துப் போனதாகவோ உணர்ந்தால், உடனடியாக நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளுங்கள். நீரிழிவு நோயினால் பாதங்களில் வரக்கூடிய பிரச்சனைகள்

நரம்பு பிரச்சனைகள்: நீரிழிவு நோயாளிகளுக்கு பொதுவாக ஏற்படக் கூடிய பிரச்சனைகளில் ஒன்று நரம்பியல் கோளாறு. திடீரென்று உங்கள் கால் பாதங்களில் உள்ள நரம்புகள் செயல்படாமல் போகும் போது, வலியோ அல்லது மரத்து போனது போன்ற உணர்வோ உங்களுக்கு ஏற்படுகிறது. உங்கள் பாதங்களில் எரிச்சல் இருந்தால், அது நரம்பியல் கோளாறின் அறிகுறியாகும். ஆரம்பத்திலேயே இதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.

ரத்த ஓட்டம் தடைபடுவது (புற தமனி நோய்): டயாபடீஸ் நோயாளிகளுக்கு வரக்கூடிய இன்னொரு பிரச்சனை, புற தமனி நோய். இதில் உங்கள் கால் பாதங்களுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைபடும். உங்கள் பாதங்கள் குளிர்ச்சியாக இருந்தால், ஒழுங்காக ரத்த ஓட்டம் செல்லவில்லை என்று அர்த்தம். காயங்கள் மெதுவாக ஆறுவதும் ரத்த ஓட்ட பிரச்சனையின் அறிகுறிகளாகும். இதற்கு உடனடியாக நாம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியில் தடுமாற்றம்: டயாபடீஸ் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கி எளிதாக தொற்றுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. கால் பாதங்களில் ஏற்படக் கூடிய தொற்றுகள் விரைவாக பரவக் கூடியவை. ஆகவே இதை உடனடியாக கவனித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கால் நகங்களின் ஆரோக்கியம்: உங்கள் கால் நகங்கள் எளிதாக உடைந்து போனால், உடனடியாக சர்க்கரை அளவை பரிசோதியுங்கள். அதேப்போல் நகங்களின் நிறம் கருப்பாகவோ அல்லது மஞ்சளாகவோ அல்லது ஒழுங்காக வளர்ச்சி பெறாமல் இருந்தாலோ, நீரிழிவு பரிசோதனை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். டயாபடீஸ் நோயாளிகளுக்கு கால் விரல்களில் பூஞ்சைகள் எளிதாக தாக்கும் வாய்ப்புள்ளது. ஆகையால் நகங்களில் நிறம் மாறுவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

கால் பாதங்களில் வரக்கூடிய பிரச்சனைகளை நாம் கவனிக்காமல் இருந்தால், அது நம் ஒட்டுமொத்த உடல்நலனிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி நம் இதய செயல்பாடுகளிலும் நமது நடமாட்டங்களிலும் கடுமையான தாக்கத்தை உண்டாக்கும்.

நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும். அதே சமயத்தில் கால் பாதங்களின் ஆரோக்கியத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சரிவிகித டயட் மற்றும் சீரான உடற்பயிற்சியின் மூலம் உங்கள் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் டயாபடீஸ் நோயாளிகள் சரியான காலணிகளை அணிய வேண்டியது அவசியமாகும். சுகாதாரமான பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தால் பாதங்களில் ஏற்படும் தொற்றுகளை குறைக்கலாம்.

Related Posts

Leave a Comment