தமிழர்கள் மாட்டுப்பொங்கல் கொண்டாட இதுதான் காரணம்..

by Lifestyle Editor

தமக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறுவது தமிழர்களின் மாண்பு. அவ்வகையில் வருடம் முழுவதும் தனக்காக உழைக்கும் பசுக்களுக்கும், காளைகளுக்கும் நன்றி சொல்வதற்காக, தை மாதம் இரண்டாம் தினத்தை மாட்டுப்பொங்கல் என்று கொண்டாடுகின்றனர். உழவுத் தொழிலுக்கு மிகவும் உதவும் மாடுகளுக்கு நன்றி சொல்வதற்காகவே இவ்வாறு செய்கின்றனர்.

விடியற் காலையில் தொழுவத்தை சுத்தம் செய்து, மாக்கோலம் இட்டு, தோரணங்களை கட்டுவார்கள். பின்னர் மாடுகளை குளிப்பாட்டி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து பொட்டிட்டு, கூறாக சீவிய அவற்றின் கொம்புகளுக்கு வண்ணங்கள் பூசி அழகுபடுத்துவார்கள். மேலும் கொம்புகளில் குஞ்சம் அல்லது சலங்கைகள் கட்டி, கழுத்தில் சலங்கைகள், தோலில் செய்யப்பட்ட வார் பட்டைகள் மற்றும் மாலைகள் ஆகியவற்றை அணிவித்தும் அழகூட்டுவார்கள். பழைய மூக்கணாங்கயிறுகளை மாற்றி புதிய மூக்கணாங்கயிறுகளையும், தாம்பு கயிறுகளையும் அணிவிப்பார்கள். சிலர் கொம்புகளில் பரிவட்டம் கட்டி மாடுகளை கௌரவிப்பதும் உண்டு.

சுத்தம் செய்த தொழுவத்திலேயே பொங்கல் வைப்பார்கள். பின்பு வாழை இலையில் நீர் தெளித்து, பொங்கல், கரும்பு, வாழைப்பழம் போன்றவற்றை படைத்து மாட்டிற்கு கற்பூரம் காட்டிய பின் படைத்த உணவை ஊட்டுவார்கள். பசுக்களை வணங்குவதால், மகாலட்சுமியை வீட்டிற்கு அழைப்பதாகவும் கருதுகிறார்கள். பசுக்களின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் இருப்பதாகக் கருதுகிறார்கள். அவர்களின் ஆசியை பெறுவதற்காகவும் பசுக்களை போற்றுகிறார்கள்.

மேலும் உழவுக்கு உதவும் கருவிகள் மற்றும் வாகனங்களை நன்றாக கழுவி, துடைத்து, பொட்டிட்டு, மாலைகள் அணிவித்து அவற்றிற்கும் தங்களது நன்றியை தெரிவிப்பார்கள். அன்றைய தினம், தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் ஏறு தழுவுதல் போட்டிகளும் நடைபெறும். கிராமங்களில் கலை நிகழ்ச்சிகளும், சிறுவர்களுக்கான போட்டிகளும் நடைபெறும். இவ்வாறாக இந்த தினத்தை தமிழர்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

மாடு வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் மாட்டுப்பொங்கல் என்று பலரும் தவறாக நினைத்திருக்கிறார்கள். மாடு இல்லாதவர்களும் அன்றைய தினத்தை கொண்டாட முடியும். மாட்டுப்பொங்கல் நாளில் தங்களுடைய முன்னோர்களுக்கு பிடித்த உணவை சமைத்து, அவற்றை படையல் இட்டு, தங்களின் குலம் காக்குமாறு அவர்களை வேண்டிக் கொள்ளலாம். இதற்கு ‘முன்னோர் படையல்’ என்று பெயர். அன்றைய தினம் உங்கள் அருகாமையில் உள்ள முதியவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் உணவை தானம் செய்தும் மகிழலாம்.

Related Posts

Leave a Comment