நட்ஸ் வறுத்து சாப்பிடுவது நல்லதா..? அப்படியே சாப்பிடுவது நல்லதா …

by Lifestyle Editor

முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், வேர்கடலை போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், பொரித்த உணவுகள் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளுக்கு பதிலாக நட்ஸ்களை சாப்பிடுவது நம் உடலுக்கு எக்கச்சக்கமான பலன்களை அளிக்கும். இவற்றில் புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்கள், மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது.

பெரும்பாலான நட்ஸ் வகைகள் குறைந்த கார்போஹைட்ரேடுகளையும், அதிக அளவு ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஆகியவற்றையும் கொண்டுள்ளது. நட்ஸ் வகைகளை மிதமான அளவுகளில் சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும். அது மட்டும் இல்லாமல் நட்ஸ் வகைகளில் மெக்னீசியம், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஈ போன்ற உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது. நட்ஸ் வகைகளை இரண்டு விதமாக சாப்பிடலாம். நட்ஸ் வகைகளை வறுத்து சாப்பிடுவது சிறந்ததா? அல்லது பச்சையாக சாப்பிடுவது சிறந்ததா? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வறுத்த நட்ஸ்களை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்:
நட்ஸ்களை வறுப்பதால் அவற்றின் சுவை, அமைப்பு, மணம் போன்றவை மாறுபடுகிறது. இது அவற்றை மொறு மொறுப்பாக மாற்றுவதால் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். மேலும் இது எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு : ஒருவேளை நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க திட்டமிட்டு இருந்தால், நட்ஸ்களை எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது. ஏனெனில், எண்ணெய் சேர்ப்பது கலோரி அளவுகளையும், கொழுப்பு அளவுகளையும் அதிகரிக்கும். ஆகவே நீங்கள் நட்ஸ்களை ட்ரை ரோஸ்ட் செய்து சாப்பிடுவது சிறந்தது.

வறுப்பதற்கு பயன்படுத்தும் வெப்பத்தின் முக்கியத்துவம் : நட்ஸ் வகைகளை ரோஸ்ட் செய்யும் பொழுது அவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் வைட்டமின் அளவுகளில் மாற்றம் ஏற்படுகிறது. மேலும் வறுக்கும் பொழுது அவற்றில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகளும் குறைகிறது. மேலும் இதனை நீண்ட நேரத்திற்கு வெளியில் தவறான முறையில் சேமித்து வைக்கும் பொழுது அந்த நட்ஸ்களின் சுவை மற்றும் மணமானது மாறிவிடுகிறது.

வீட்டிலேயே வறுத்து சாப்பிடுவது சிறந்தது : ஒருவேளை உங்களுக்கு வறுத்த நட்ஸ் சாப்பிட பிடிக்கும், ஆனால் அவற்றின் ஊட்டச்சத்துகளை இழக்காமலும், கூடுதல் கலோரிகளை சேர்க்காமலும் அவற்றை சாப்பிட விரும்பினால், கடைகளிலிருந்து நட்ஸ் வகைகளை பச்சையாக வாங்கி, அதனை வீட்டில் வறுத்து சாப்பிடுவது சிறந்தது. வீட்டில் நாம் வறுக்கும் பொழுது சரியான வெப்பநிலையிலும், எண்ணெய் மற்றும் உப்பு சேர்க்காமலும் வறுத்துக் கொள்ளலாம். இதனால் அது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கிறது.

வறுக்காத மற்றும் வறுத்த நட்ஸ் வகைகள் ஆகிய இரண்டிலுமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இரண்டிற்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் ஒன்றும் கிடையாது. எனினும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நட்ஸ் வகைகளை நீங்கள் வறுத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். ஆனால் கடைகளில் வறுத்த நட்ஸ்களை வாங்கி சாப்பிடும் பொழுது அவற்றில் அதிக உப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லை எனில் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

Related Posts

Leave a Comment