பெண்கள் இணையதளத்தில் சுயவிவரங்களை பகிரும்போது அதிக கவனம் தேவை

by Lifestyle Editor

இணையதளம் இரண்டு முகங்களை கொண்டது. நமக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் உடனடியாக தருவது ஒரு முகம். ஆபாசம், ஹேக்கிங் என்று வக்கிரங்களை காட்டுவது மற்றொரு முகம். இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோரில் 48 சதவீதம் பேர் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் 11.3 கோடி மக்கள் சராசரியாக ரூ.15 ஆயிரத்்துக்கும் அதிகமான தொகையை இணையதள திருடர்களிடம் இழக்கிறார்கள், என்று ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இது சர்வதேச அளவில் சராசரியாக ரூ.23,878-ஆக உள்ளது. அப்பாடா நம்மைவிட மற்றவர்கள் கூடுதலாக இழக்கிறார்கள் என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

பொதுவாக சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் இணையதளத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்போது, பாஸ்வேர்டு உள்பட கணக்கு விவரங்களை திருடுவது, பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பது, ஆபாச படங்களை வெளியிடுவது போன்றவைதான் தற்போது பெருகி வருகின்றன. 54 சதவீதம் பேர் தங்களுக்கு தெரியாமலேயே கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் ஆன்லைனில் திருடப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

40 சதவீதத்தினர் மட்டுமே சைபர் கிரைம் குற்றம் நடந்தால் என்ன செய்வது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். 60 சதவீதத்தினர் ஆன்லைன் குற்றங்கள் குறித்த அச்சத்தில் உள்ளனர். உலகிலேயே இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.

வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய இணையதளம், தற்போது பாதை மாறி அழைத்துச் செல்கிறது என்பதைத்தான் தற்போது வெளியாகியுள்ள அறிக்கை காட்டுகிறது. பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும் போது 41 சதவீதம் பேர் மட்டுமே சரியாக, பாதுகாப்பாக பயன்படுத்துகிறார்கள். இப்படி அடிப்படை பாதுகாப்புகளையே சரியாக செய்யாததன் விளைவுதான் இந்த இணையதள குற்றங்கள் அதிகமானதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இணையதள பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. எதற்காக சுய விவரங்களை கேட்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் விறுவிறுவென நம்மை பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுத்து விடுவதும் நடக்கிறது.. இந்த தகவல்கள் யாரோ ஒரு கும்பலால் திருடப்படுகிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. இதனால் பணத்தை இழக்க நேருகிறது. எனவே நமது தகவல்களை குறைந்தபட்சம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாலே இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து எளிதாக விடுபடலாம். எனவே சுயவிவரங்களை பகிரும்போது அதிக கவனம் தேவை.

Related Posts

Leave a Comment