பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கப்பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பொங்கல் பரிசு பொருட்கள் ரொக்கப்பணம் விநியோகம் 9ம் தேதிக்குப் பின் தொடங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. எக்காரணம் கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும், அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் இருந்து நுகர்வு செய்வதற்கு முன்பாக தரமாக இருப்பதை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள், மாவட்ட அலுவலர்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர்கள் அடங்கிய உயர் அலுவலர் குழு மூலம் உறுதி செய்த பின்னரே நியாய விலை கடைகளுக்கு அனுப்ப வேண்டும்.
அதேபோன்று வட்டார அளவிலான கொள்முதல் குழுவில் இடம் பெற்றுள்ள வேளாண்மை அலுவலர் ,துணை வேளாண்மை அலுவலர் கரும்பின் தரத்தினை ஆய்வு செய்து பரிந்துரை செய்த பின் நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் நியாய விலை கடைகளில் இருந்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும். அரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு உரிய தரத்துடன் இருப்பதையும் உறுதி செய்திட வேண்டும். இதற்குரிய தர சரிபார்ப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக கண்காணித்து தேவைப்படும் உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.ஜனவரி 13ஆம் தேதி இரண்டாவது வெள்ளிக்கிழமை நியாய விலை கடைகள் வழக்கம் போல செயல்படும் என்று தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.