ராமர் கோயில் நிலம் வாங்குயதில் ஊழல்… அப்செட்டான யோகி

by Lifestyle Editor
0 comment

நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்துவந்த அயோத்தி வழக்கு 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அதன்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், மசூதி கட்டுவதற்காக வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, சன்னி வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தீர்ப்பு வழங்கிய மூன்று மாதத்திற்குள் அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்திருந்தது.

அதன்படி, ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளையை உருவாக்கி, அதற்குத் தலைவராக மகந்த் நிருத்ய கோபால் என்பவரையும் உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமித்தது. கோயில் கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை அறக்கட்டளை மேற்கொண்டிருந்த வேளையில், கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கோயில் கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. சென்ற ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.

இதற்குப் பிறகு கோயிலுக்காக அயோத்தி நிலத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் நிலத்தின் மதிப்பு தாறுமாறாக எகிறியுள்ளது. அவ்வாறு நிலம் வாங்கியதில் தான் தற்போது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை எதிர்க்கட்சியான சமாஜ்வாதி தலைவர் பவண் பாண்டே கூறியிருக்கிறார். அயோத்தியின் பிஜேஷ்வர் தோப்பில் பாபா ஹரிதாஸ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை மார்ச் 18ஆம் தேதி உள்ளூரின் சுல்தான் அன்சாரி, ரவி மோகன் திவாரி ஆகிய இருவருக்கும் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

இதனை அறிந்துகொண்ட அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினர் அனில் மிஸ்ரா, அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயா ஆகியோர் அதே நிலத்தை சுல்தானிடம் ரூ.18.5 கோடிக்கு வாங்கியுள்ளனர். ஒரே நாளிலேயே ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார். இந்தக் குற்றச்சாட்டையடுத்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜக அரசை துளைத்தெடுத்து வருகின்றனர். தற்போது ராமர் கோயில் நில முறைகேடு விவகாரத்தில் அறிக்கை அளிக்க ராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment