யூடியூப் பார்த்து, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கொரோனா நோயாளி!

by Lifestyle Editor
0 comment

கோவை

கோவை அருகே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் யூடியூப் பார்த்து வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கோவை போளுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே, ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால், சம்பத்குமார் யூடியூப் வீடியோக்களை பார்த்து சாராயம் காய்ச்ச கற்றுக் கொண்டு உள்ளார்.

பின்னர், ஆலந்துறை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், கோவை மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் டிஎஸ்பி சுந்தரராஜன் தலைமையிலான போலீசார், நேற்று மாலை சம்பத்குமாரின் வீட்டில் சோதனையிட சென்றனர்.

அப்போது, சம்பத்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர் வீட்டு தனிமையில் இருப்பதும், வீடு இரும்பு தட்டியை கொண்டு அடைக்கட்டு உள்ளதால், அவர் வீட்டிற்குள் கள்ளச் சாராயம் காய்ச்சி வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து, அவரது வீட்டில் இருந்த 1,500 லிட்டர் சாராய ஊறல், 10 லிட்டர் சாராயம், கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, சம்பத்குமாரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் யூடியூப் வீடியோ பார்த்து கள்ளச் சாராயம் காய்ச்சியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, சம்பத்குமாருக்கு தொற்று குணமடைந்த உடன், அவரை கைதுசெய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Related Posts

Leave a Comment