35000 ஆண்டுகள் பழமையான மனிதர்கள் வேட்டையாடிய சிறிய குகை கரடி மண்டை ஓடு கண்டுபிடிப்பு

by Lifestyle Editor
0 comment

பழங்கால பொருட்களை ஆராய்ச்சி செய்யும் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் சைபீரிய குகை அகழ்வாராய்ச்சியின் பொழுது தற்பொழுது அழிந்து வரக்கூடிய சிறிய குகை கரடியின் மண்டை ஓடு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். மண்டை ஓட்டை விரிவாக பரிசோதனை செய்த பொழுது மண்டை ஓட்டின் பின்புறத்தை நோக்கி ஒரு சிறிய நீண்ட குறுகிய துளை ஒன்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டனர்.

இது ப்ளீஸ்டோசீன் கால மனிதனால் ஏற்பட்டிருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். இந்த கண்டுபிடிப்பு பண்டைய மனிதர்கள் சிறிய குகை கரடிகளை வேட்டையாடியிருப்பதற்கான ஆரம்ப சான்றுகளாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ப்ளீஸ்டோசீன் (Pleistocene) சகாப்தத்தின் பிற்பகுதியில் உர்சஸ் ரோசிகஸ் (Ursus rossicus) எனப்படும் சிறிய குகை கரடிகள் வடக்கு யூரேசியா முழுவதும் வசித்து வந்துள்ளன.

அதேநேரத்தில் 30,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முன்பு வடகிழக்கு சைபீரியாவிற்கு சென்ற ஹோமோ சேபியன்ஸ் வேட்டைக்காரர்களும் குகைகளில் வசித்து வந்தனர். ப்ளீஸ்டோசின் கரடி எலும்புகளோடு பண்டைய மனிதர்கள் பயன்படுத்திய கலை பொருள்களும் சேர்ந்து கிடைப்பது வழக்கமான ஒன்றல்ல. தெற்கு யூரல் மலைகளில் அமைந்துள்ள இமானே குகையில் மூன்று ஆண்டுகள் அகழ்வாராய்ச்சியின் போது மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களுக்கு அருகில் இந்த கரடியின் மண்டை ஓட்டை கண்டுபிடித்துள்ளார்கள்.

கரடியின் மண்டை ஓட்டில் உள்ள வளர்ச்சி அடுக்குகளை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் அந்த கரடி சுமார் 30,000 ஆண்டுகள் பழமையானது என கண்டுபிடித்துள்ளனர். அந்தக் குகை கரடி இறக்கும்பொழுது பத்து வயதாக இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த குகைக்குள் மம்மத் வகை யானைகள் (mammoths), குகை சிங்கங்கள், அடர்ந்த ரோமங்கள் கொண்ட காண்டா மிருகங்கள், புல்வெளி பைசன் காட்டெருமைகள், சிவப்பு நரிகள் போன்ற பல்வேறு மிருகங்களின் பல்வேறு எலும்புத்துண்டுகளையும் கண்டுபிடித்துள்ளனர்.

ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தில் ஹோமோ சேபியன்ஸ் மம்மத் வகை யானைகள் போன்ற பாலூட்டி விலங்குகளை அதிகம் அவர்கள் தேவைக்காக வேட்டையாடியது தெரிய வந்துள்ளது. இந்த மரபணு ஆராய்ச்சிகள் மனிதர்கள் பெரிய குகை கரடிகள் அழிந்து போகும் அளவிற்கு வேட்டையாடி இருக்கலாம் என்பதை காட்டுகிறது. சிறிய குகை கரடி மண்டையோட்டில் காணப்படக்கூடிய இந்த சேதம் உறுதிப்படுத்தப்பட்டால் மனிதர்கள் சிறிய குகை கரடியை வேட்டையாடியதற்கான முதல் ஆதாரமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ரஷ்யாவின் அறிவியல் அகாடமியின் மூத்த ஆராய்ச்சியாளரான டிமிட்ரி கிம்ரானோவ் ஒரு அறிக்கையில் கூறும்போது இந்த குகை கரடியின் மண்டை ஓட்டில் உள்ள துளை இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ இருக்கலாம். அதாவது ஒன்று அந்த கரடி வேட்டையாடப்பட்டு இருக்கலாம். அல்லது அந்த கரடியின் தலையில் ஏதாவது கல் விழுந்து இருக்கக்கூடும். அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீரானது அந்த மண்டையோட்டின் குறிப்பிட்ட பகுதியில் விழுந்து இந்த ஓட்டை வந்திருக்கலாம்.

ஆனால் இதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு பெரும்பாலும் இந்த விலங்குகள் பண்டைய மக்களால் கொல்லப்பட்டது என்பதே உண்மை என சொல்லியிருக்கிறார். இன்னொன்றையும் அவர் சொல்லியிருக்கிறார். இந்த மண்டையோட்டின் துளை அந்த காலத்தில் உள்ள ஒருவகை சடங்கு நடைமுறையாக இருக்கலாம். ஏனென்றால் அந்த காலங்களில் சடங்கு முறைகள் பொதுவாக இருந்து வந்துள்ளது.

பண்டைய காலங்களில் சடங்குகள், புனிதமான நடைமுறைகள் பரவலாக இருந்து வந்துள்ளது. அதனால் கரடி இறந்த பிறகு சடங்கு நடைமுறையாக கூட மண்டையோட்டில் துளை ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். தீவிரமான ஆராய்ச்சிக்கு பிறகு உண்மை தெரியவரும்.

Related Posts

Leave a Comment