கழிப்பறைப் பயிற்சியை குழந்தைக்கு எப்போது தொடங்கலாம்?

by Lifestyle Editor
0 comment

6 மாதத்துக்குப் பின்னர் திட உணவு சாப்பிட பழக்கமாகிய பிறகு குழந்தைகளின் மலம், சிறுநீர் இரண்டிலும் துர்நாற்றம் இருக்கவே செய்யும். சிறு குழந்தைகளாக இருக்கும்போது குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வருகிறது எனச் சொல்ல தெரியாது. ஆனால், வளர வளர குழந்தைகளுக்கு இயற்கை கழிவுகள் வருகின்றன எனச் சொல்ல தெரியும். அதற்கான பயிற்சியை எப்போது தொடங்குவது? எப்படித் தொடங்குவது? பார்க்கலாம் வாங்க… குழந்தைகளுக்கு சிறு வயதிலே காலை கடன் பற்றிய முக்கியத்துவத்தை சொல்லி தர வேண்டும். தொடக்கத்திலே சொல்லி தருவது மிகவும் முக்கியம்.

4-5 மாத குழந்தைகள்

முகம் சுளிப்பது, உடலை முறுக்குவது, வாயைக் குவிப்பது போன்ற சமிக்கைகளை வைத்தே குழந்தை சிறுநீரோ மலமோ கழிக்க போகிறது எனப் பெற்றோர் யூகிக்க வேண்டும்.

6 மாத குழந்தைகள்

பொதுவாக, குழந்தைகள் தூங்கி எழுந்த பின் சிறுநீர் கழிப்பார்கள். அல்லது குழந்தை மலம், சிறுநீர் கழிக்க போகிறது என நீங்கள் யூகித்தால் அப்போதே குழந்தையை தூக்கி கொண்டு கழிப்பறைக்கோ அல்லது சரியான இடத்துக்கோ செல்லுங்கள். அப்போது ‘ஸ்ஸ்ஸ்’ எனச் சொல்லி குழந்தையை சிறுநீரோ மலமோ கழி எனச் சொல்லுங்கள். இதெல்லாம் குழந்தை புரிந்து கொள்வதற்கான டெக்னிக். ஒவ்வொரு முறை தூங்கி எழுந்த பின்னும் குழந்தையை தூக்கி கொண்டு, பேன்ட் அல்லது டயாப்பரை கழற்றி கழிப்பறை தரையில் நிற்க வைத்தோ உட்கார வைத்தோ சிறுநீர் போ எனச் சொல்லி பழக்கினாலே குழந்தைகள் மெதுவாகப் புரிந்துகொள்வார்கள். கீழே அணிந்திருக்கும் ஆடையை கழற்றினால் சிறுநீர் மலம் கழிக்க வேண்டும் எனக் குழந்தைகள் புரிந்து கொள்ளும். இதற்காக குழந்தைக்கு அதிக பிரஷரோ திட்டுவதோ அடிப்பதோ கூடாது. சில குழந்தைகள் புரிந்து கொள்ளும். சில குழந்தைகளுக்கு புரியாது. இது வெறும் பயிற்சிதான் கட்டாயம் அல்ல.

9 மாத குழந்தைகள்

குழந்தை சிறுநீர் கழிக்கும் சமிக்கைகளை செய்தால், பாப்பாக்கு சிறுநீர் வருதா, பாத்ரூம் போகலாமா எனக் கேளுங்கள். அதன்படி அழைத்தும் செல்லுங்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையைப் பழக்கப்படுத்தலாம். பொதுவாக குழந்தைகளுக்கு தாயோ தந்தையோ பெரியவர்களோ கழிப்பறைக்கு சென்றால் சிறுநீர் கழிக்க சென்று இருக்கிறார்கள் எனச் சொல்லுங்கள். இதனால் கழிப்பறையில்தான் மலம், சிறுநீர் கழிக்க வேண்டும் எனக் குழந்தைகளுக்கு புரியும்

எப்போது கழிப்பறை பயிற்சியைத் தொடங்கலாம்?

14 – 15 மாதங்களுக்கு பின்பு தானாக உட்கார்ந்து மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பதற்கானப் பழக்கத்துக்கு குழந்தைகள் வருவார்கள். இந்த வயதுக்கு பின்னும் இந்தப் பழக்கத்துக்கு வரவில்லை என்றால், பெற்றோர் கட்டாயம் கழிப்பறைப் பயிற்சியைக் கொடுத்தாக வேண்டும்.

எந்தப் பருவத்தில் கழிப்பறை பயிற்சி தரலாம்?

கழிப்பறைப் பயிற்சி தொடங்கும் முன் பேன்ட், ஜட்டி, பாவாடை போன்றவற்றை கழற்ற குழந்தைக்கு கற்று தர வேண்டும்.

ஒருவேளை ஆடையில் சிறுநீர் மலம் கழித்துவிட்டால்கூட எப்படி பக்குவமாக கழற்றுவது என சொல்லி தர வேண்டும்.

அதன் பின் தானாக ஆடைகளை மாட்டி கொள்ளும் முறையும் குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டும்.

நடக்க ஆரம்பித்த குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சி சொல்லி தரலாம்.

குழந்தைகளுக்கு மலம் கழிக்க தற்போது பிளாஸ்டிக் கழிப்பறை தொட்டிகள் கிடைக்கின்றன. அதில் அமர வைத்துப் பழக்கலாம்.

குழந்தையை தினமும் இந்திய கழிப்பறையில் உட்கார்வது போல அமர வைத்துப் பழக்கப்படுத்தலாம். இப்படிதான் உட்கார வேண்டும் என சொல்லிக் கொடுக்கலாம்.

தினமும் 6-10 முறை சிறுநீர் கழிக்கவும் 1 அல்லது 2 முறை மலம் கழிக்கும் பழக்கத்துக்கும் குழந்தைகளை கொண்டு வர வேண்டும். காலைக்கடன்களைக் கழிக்கும் பயிற்சியை சொல்லி தர வேண்டும்.

சிறுநீரோ மலமோ கழிக்க வேண்டும் என உணர்வு வந்தவுடன் அம்மா, அப்பா அல்லது அருகில் இருப்பவரிடம் சொல்ல வேண்டும் எனக் குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்.

இதை ஒரு நாள், இரண்டு நாள் மட்டும் சொல்லிவிட்டு நிறுத்த கூடாது. தினந்தோறும் சொல்லி குழந்தைக்கு புரிய வையுங்கள்.

குழந்தைகளுக்கு பெரும்பாலும் இந்திய கழிப்பறையை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் வெஸ்டர்ன் கழிப்பறைப் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு நல்லதல்ல.

சாதாரணமாக குழந்தைகளுக்கு குத்துகாலிட்டு உட்கார சொல்லிக் கொடுங்கள். இப்படி உட்கார்ந்து மலம், சிறுநீர் கழிக்க வேண்டும். இப்படி உட்கார்ந்து கழித்தால் மலம் எளிதில் வெளியேறும் எனச் சொல்லி கொடுக்க வேண்டும்.

கழிப்பறையில் இப்படி உட்கார வேண்டும் எனப் பெற்றோர் டெமோ செய்து காண்பிப்பது இன்னும் நல்லது. நம் குழந்தைக்கு நாம்தான் சொல்லி தர வேண்டும். அது நம் கடமை.

இந்திய கழிப்பறை இல்லாத வீட்டில் வெஸ்டர்ன் கழிப்பறை மட்டும் இருந்தால் குழந்தைக்கென டாய்லெட் சீட் வாங்கி, கழிப்பறையில் பொருத்தி அதில் குழந்தையை அமர வைத்துப் பழக்கப்படுத்தலாம்.

2 வயது முடிந்த குழந்தைகளுக்கு இதுவரை பிளாஸ்டிக் கழிப்பறை தொட்டியில் மலம் கழித்துக் கொண்டிருப்பதை நிறுத்தி, கழிப்பறையில் எப்படி மலம் கழிப்பது எனச் சொல்லி கொடுக்கலாம்.

கழிப்பறையில் மலம் கழிக்க சில குழந்தைகள் பயப்படும். எனவே, பெற்றோர் பயத்தைப் போக்க முயற்சிக்க வேண்டும். நீ வளர்ந்து கொண்டிருக்கிறாய். பெட்ரூம், ஹால், கிச்சன் போன்ற இடங்களில் எல்லாம் மலம் கழிக்க கூடாது. கழிப்பறையில்தான் மலம் கழிக்க வேண்டும் எனப் பக்குவமாக சொல்லி புரிதலை ஏற்படுத்துங்கள்.

காலைக் கடன்களை அதாவது மலம் கழிப்பதை கழிப்பறையில் செய்வதுதான் நல்லது. அதுதான் சுத்தம், ஒழுக்கம். கிருமிகளும் பரவாது எனச் சொல்லுங்கள்.

ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் மிக விரைவில் கழிப்பறை பயிற்சிகளைக் கற்றுக்கொள்வதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

எந்த வயதுக்குள் குழந்தைகள் தானாக சுத்தப் படுத்திக்கொள்ள வேண்டும்?

மலம் கழித்த பிறகு, தங்களைத் தானாக சுத்தம் செய்துகொள்ளவும் கற்று தருதல் நல்லது. சுத்தம் செய்து கொள்ளும் முறையை 5-6 வயதுக்குள் கற்றுத் தந்திட வேண்டும். மலம் கழித்த பின் எப்படி சுத்தம் செய்வது எனக் குழந்தைக்கு பெற்றோர் சொல்லி தருவதும் முக்கியம். முன்னிருந்து பின் கழுவுதல்தான் சரி, பின்னிருந்து முன் கழுவ கூடாது எனச் சொல்லுங்கள். இதனால் தொற்றுகள் பரவாமல் தடுக்கப்படும்.

மலம் கழிக்க சிரமப்படும் குழந்தைகளை என்ன செய்யலாம்?

மலச்சிக்கலோ பயமோ அல்லது வேறு எதாவது பிரச்னையா எனக் கவனியுங்கள். மருத்துவரின் ஆலோசனையைக் கேட்கலாம். காலையில் மலம் கழிக்க பழக்கப்படுத்தும் முறைகளை குழந்தைக்கு சொல்லி கொடுங்கள். சரியான நேரத்துக்கு தூங்குவது, எழுந்திருப்பது, சாப்பிடுவது என அனைத்தும் சரியாக இருந்தாக மலம் கழிப்பதும் சரியாக இருக்கும். சிறு குழந்தைகளுக்கு கருப்பு உலர் திராட்சை, அத்திப்பழம், கருப்பு திராட்சை, பேரீச்சை பழம், கடுக்காய்ப்பொடி எனச் சின்ன சின்ன கைவைத்தியங்கள் மூலம் மலச்சிக்கலை எளிதில் போக்கிவிடலாம்.

Related Posts

Leave a Comment